பிக்கிள்பால்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் விளையாட்டுகளில் பிக்கிள்பால் விளையாட்டும் ஒன்று. பிக்கிள் பால் என்பது டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக விளையாடப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி விளையாடப்படுவதால் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

இது ஒருபுறம் என்றால், இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடுவதால், உடல் எடை குறைவு, இதய ஆரோக்கியம் காத்தல், மன அழுத்தம் குறைதல், எலும்பு அடர்த்தி பாதுகாக்கப்படுவது என உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பதாக விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே, பலரையும் இந்த விளையாட்டு ஈர்க்கிறது. பிக்கிள்பால் விளையாட்டு குறித்து, ஆல் திங்ஸ் பிக்கிள்பால் அமைப்பின் இயக்குநர் செந்தில் நம்முடன் பகிர்ந்து கொண்டவை.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் என் மகனை அழைக்க பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு சென்றிருந்தேன். அங்கேதான் முதன்முதலில் பிக்கிள்பால் விளையாடுவதைப் பார்த்தேன். இது என்ன புதுவிதமான விளையாட்டாக இருக்கிறது என்று அதைப்பற்றி விசாரித்து தெரிந்து கொண்டேன். எனக்கும் அந்த விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து விளையாடி வருகிறேன்.

இந்த விளையாட்டு, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவையாக இருக்கும். இதை உள், வெளி அரங்குகளில் விளையாடலாம். பாட்மிண்டன் விளையாடத் தேவையான ‘நெட், ‘பேடல்ஸ்’ எனப்படும் பேட், எடை குறைவான ‘பிளாஸ்டிக்’ பந்து (ஓட்டைகளோடு) இருந்தால் போதும் ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான பொருள்கள் தயார். பாட்மிண்டன், டென்னிஸ் விளையாட்டுகளைப் போலவே ஒற்றையர், இரட்டையர் எனப் பிரிந்து விளையாடலாம்.

இந்த விளையாட்டை குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என வயது வித்தியாசமின்றி, எந்த வயதிலும் விளையாடலாம். அதுபோன்று எல்லா வயதினரும் கலந்து ஒன்றாக விளையாடுவதால் இதைக் குடும்ப விளையாட்டு என்றும் வர்ணிக்கப்படுகிறது. இதுவே இந்த விளையாட்டு பிரபலமாவதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, மற்ற விளையாட்டுகளைப் போல ‘பிக்கிள் பால்’ விளையாட முறையான பயிற்சித் தேவையில்லை. ஓரிரு நாட்கள் தொடர்ந்து விளையாட்டை கவனித்தாலே பிக்கிள் பால் விளையாட்டுக்கான நுணுக்கம் தெரிந்துவிடும். ஆக, இந்த விளையாட்டை விளையாடுவது எளிது, பாதுகாப்பானதும் கூட.

இந்த விளையாட்டு எல்லா வயதினராலும் கலந்து விளையாடப்படுவதால் மன அழுத்தம் குறைந்து, புத்துணர்வாக இருப்பதாகவும், உடல் ஃபிட்டாக இருப்பதாகவும் விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.ஆரம்பத்தில் இந்த விளையாட்டை நான் விளையாடும்போது இதில் சிறு சிறு மாற்றங்கள் இருந்தால், இன்னும் ஆர்வமாக இருக்கும் என நினைத்தேன். என்னைப் போலவே பலரும் எண்ணினார்கள். ஆனால், எப்படி, எங்கே யாரிடம் சொல்லி மாற்றுவது என்று தெரியவில்லை. அப்போதுதான் நாமே ஏன் இதற்காக ஒரு அமைப்பை தொடங்கக்கூடாது என்று தோன்றியது. அதில் உருவானதுதான் ஆல் திங்ஸ் பிக்கிள்பால் அமைப்பு.

2023-இல் இந்த அமைப்பை தொடங்கினேன். பிறகு, நான் நினைத்தது போன்று அனைவரின் ஆலோசனையுடன் சிறு சிறு மாற்றங்கள் செய்து விளையாட ஆரம்பித்தோம். சர்வதேச அளவில் ‘பிக்கிள் பால்’ விளையாட்டுக்கென அமைப்பு இயங்கி வருகிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கென தனியார் அமைப்புகள் உள்ளன. அவ்வப்போது வெவ்வேறு பிரிவுகளின்கீழ் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. சர்வதேச அளவில் பிக்கிள்பால் விளையாட்டுப் போட்டிகள் சூடுபிடித்ததால், ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவுக்கு ‘ஃபேவரைட்’ விளையாட்டாகவும் மாறிவருகிறது.

இந்தியாவை பொருத்தவரை, கொரோனாவுக்குப் பிறகுதான் பிக்கிள்பால் விளையாட்டு இந்தியாவுக்குள் பரவத் தொடங்கியது. இப்போது பெங்களூரு, ஹைதராபாத், மும்பை என ஒவ்வொரு பெருநகரிலும் பிக்கிள்பால் தடம் பதித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை சென்னை, கோவை நகரங்களில் பிக்கிள்பால் விளையாட்டுக்கெனத் தனி அரங்குகள் அமைத்து விளையாடி வருகிறார்கள் பிக்கிள் பால் ஆர்வலர்கள்.

இந்தியாவில், சென்னை சூப்பர் குயின்ஸ், பெங்களூரு மகாராணி, அமராவதி ஏசஸஸ், புனே பிரின்சஸஸ், கோவை ருத்ராஸ், பாம்பே பாஷாஸ், ஹைதராபாத் திவாஸ் போன்ற எட்டு அணிகள் மிகவும் பிரபலமாக உள்ளது. 1965 இல் அமெரிக்காவின் பெயின்பிரிட்ஜ் தீவுப் பகுதியைச் சேர்ந்த மூவரால் ‘பிக்கிள் பால்’ அறிமுகமானது. ஜோயல் பிட்சார்ட், பில் பெல், பார்னி மெக்கல்லம் ஆகிய மூவர் தங்களது குழந்தைகள் பொழுதுபோக்க வேண்டுமென்பதற்காக ‘பிக்கிள் பால்’ விளையாட்டை அறிமுகப்படுத்தினர். நாளடைவில் அமெரிக்காவின் மூலைகளுக்குச் சென்ற ‘பிக்கிள்பால்’, இளையோர் மட்டுமன்றி எல்லா வயதினரையும் கவர்ந்தது. பின்னர், உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. தற்போது பல நாடுகளில் பிக்கிள்பால் விளையாடப்படுகிறது. தற்போது, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியாதான் உள்ளது.

இந்த விளையாட்டில் தொழிலதிபர்கள், நடிகர்கள், இசைகலைஞர்கள் என பிரபலங்கள் பலரும் உள்ளனர். இவர்கள், விளையாட்டு வீரர்களாகவும், ஸ்பான்ஸர்களாகவும் இருக்கிறார்கள். பிக்கிள்பால் விளையாட்டு நல்ல பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் ‘ஃபிட்னெஸ்’ஸில் ஆர்வமிருப்பவருக்கு ஏதுவான விளையாட்டும்கூட. பாட்மிண்டன் எப்படி முழு உடல் உழைப்பை வெளிப்படுத்தும் ஒரு விளையாட்டோ, அதைப் போலவே ‘பிக்கிள் பால்’ இருப்பதால் ‘ஃபிட்’டாக இருக்க விரும்புவர்கள் ‘பிக்கிள் பால்’ பேட்டைக் கையில் எடுக்கிறார்கள். மேலும், மன அழுத்தத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்பு அடர்த்தி பாதுகாக்கவும் மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கவும் உதவுகிறது என்றார்.

பயிற்சியாளர் கோகுல்நாத் கூறுகையில்…

நான் 2022 இல் இந்த பிக்கிள் பால் விளையாட தொடங்கினேன். நான் கல்லூரி நாட்களில் பாட்மிண்டன் விளையாட கற்றுக் கொண்டேன். பின்னர், படிப்பு, வேலை என்று வந்ததால் என்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போனது. உடல் எடையும் கூடியது. இந்நிலையில், ஒருநாள் நங்கநல்லூர் வழியாக இரவில் வந்து கொண்டிருந்தபோது ஒரு இடத்தில், விளக்கு வெளிச்சத்தில் சிலர் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

அங்கே சிறிது நேரம் நின்று பார்த்தபோது பாட்மிண்டன் கோர்ட்டில் டென்னிஸ் நெட்டை கட்டி டேபிள் டென்னிஸ் விளையாடினார்கள். வித்தியாசமாக இருந்ததால், என்னவென்று விசாரித்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலிருந்து நானும் விளையாட தொடங்கினேன். ஏற்கெனவே, நான் முறையாக பாட்மிண்டன் பயிற்சி எடுத்துள்ளதால் விரைவில் இந்த விளையாட்டில் தேர்ச்சி பெற்றேன். தற்போது, பிக்கிள்பால் விளையாட்டின் பயிற்சியாளராகவும் இருக்கிறேன்.

இந்த விளையாட்டு உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள சிறந்த விளையாட்டாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் ஏற்ற விளையாட்டு இது. அதுபோன்று மன அழுத்தத்தில் இருப்பவர்கள், தனிமையில் இருக்கும் முதியோருக்கு பொழுதுபோக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் இந்த விளையாட்டு சிறந்ததாக இருக்கும்.

இந்த விளையாட்டை பொருத்தவரை ஆண்டுதோறும், உலக அளவில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில், கடந்த மார்ச் மாதம், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மைதானத்தில், பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட மகளிர் பிக்கிள்பால் பிரீமியர் லீக் எனும் டபுள்யூபிபிஎல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில், ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலா ஐந்து வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்களில் ஹைதராபாத் திவாஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.

தொகுப்பு:- ஸ்ரீ தேவிகுமரேசன்

 

Related Stories: