வெட்டிவேரு வாசம்..!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை 360°

கோடைக்காலம் என்றதும், தாகம் தீர்க்கும் பழங்களின் தேவை அதிகரிப்பது போல, கோடை வெப்பத்தை தணிக்க, வெட்டிவேரை பானைத் தண்ணீரில் ஊற வைத்துப் பருகினால் அது நாவறட்சியை நீக்கி, தாகத்தைத் தணித்து, குளிர்ச்சியைத் தருவிக்கும்.இந்த இதழில் இயற்கை 360°கதாநாயகியாக வெட்டிவேரின் வாசத்தையும், அதுதரும் குளிர்ச்சியான நேசத்தையும் அறிய, அதனுடன் ஒரு பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்..!

‘இயற்கை ஏசி’ எனப்படும் வெட்டிவேரின் புல்லையும் வேரையும் வெட்டியெடுத்த பிறகு நடுப்பகுதியான தண்டை மீண்டும் நட்டு பயிரிடுவதால் இது, ‘வெட்டிவேர்’ என அழைக்கப்படுகிறது.
குளிர்ச்சி தரும் வேர், மன மகிழ்ச்சி தரும் வேர், நாவறட்சியை நீக்கும் வேர், உடல் எரிச்சலைப் போக்கும் வேர், எட்டி நிற்போரையும் கட்டியிழுக்கும் வேர் என, பல்வேறு சிறப்பு கொண்ட நறுமணம் நிறைந்த வெட்டிவேரின் தாவரப்பெயர் Chrysopogon zizinoides மற்றும் Vetiveria zizinoides.

இது தோன்றிய இடம் இந்தியா. தாவரப் பெயரில் உள்ள ஜிஸினாயிட்ஸ் நதியை குறிப்பது. கஸ் கஸ், உஷிரா, வீரானா, சுகந்திமூலா என வடமொழியிலும், ராமாச்சம், குருவேரியா, கட்டூ, லவான்ச்சா என தெற்கிலும், காந்தத்ரனா என வேதங்களிலும், யா ஃபீக், அதிசயப் புல், சூரிய ஒளி என தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் அழைக்கப்படும் வெட்டிவேருக்கு, குரு வேர், விழல் வேர், ஓமலிகை, விரணம், இருவேலி எனத் தமிழ் பெயர்களும் உண்டு.உலகின் மிகச்சிறந்த இயற்கை நறுமண ஊட்டிகளில், வெட்டிவேரும் இடம்பெறுகிறது. லெமன் கிராஸ், நாணல் போன்ற புல் வகையைச் சேர்ந்த இதன் வேர் நறுமணத்திற்கும், மூலிகை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது.

வெட்டிவேரில் மருத்துவ குணங்களும் உண்டு. ஏறத்தாழ 150 வகையான எண்ணெய்களை அறிவியல் இதில் குறிப்பிட்டாலும், குஷிமோல், வெட்டிவோன், டெர்பினால், பென்சாயிக் அமிலம், செலினீன், லாங்கி-பைனீன் போன்ற எளிதாய் ஆவியாகும் எண்ணெய்கள் இதன் நறுமணத்திற்கும், மருத்துவ குணங்களுக்கும் மூல காரணமாக இருக்கின்றன. மேல் பூச்சாகவும், மருந்தாகவும், வாசனை திரவியமாகவும் அரோமா தெரபியிலும் பயன்படும் வெட்டிவேரிலிருந்து பெறப்படும் எண்ணெய், தோல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு உதவுவதுடன், தோல் வறட்சியை கட்டுப்படுத்தி, முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகளை போக்கவும், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. தோல் சுருக்கங்களைக் குறைத்து, இளமைத் தோற்றத்தோடு சருமம் பொலிவு பெறவும் உதவுகிறது.

ADHD எனும் கவனச்சிதறல் உள்ள குழந்தைகளுக்கான, ‘Cognitive Behavioural Therapy’யில் வெட்டிவேரின் எண்ணெய் பெரிதும் உதவுவதுடன், பயம், பதட்டநிலை, மன அழுத்தம், தூக்கமின்மையை குறைத்து, ஆழ்ந்த உறக்கத்தையும், புத்துணர்ச்சியையும் தந்து, மனநோய், அல்சைமர், பார்க்கின்சன் போன்ற மூளைத் தேய்மான நோய்களுக்கும், வலிப்பு நோய், நரம்புத் தளர்வு, ஒற்றைத் தலைவலி போன்ற நரம்பு சார்ந்த பிரச்னைக்கும் பயனளிக்கிறது.

இதிலிருக்கும் பாக்டீரியா எதிர்ப்புத் திறன், காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் பரவாமல் தடுக்கவும் உதவுகிறது. சரவாங்கி, கௌட் நோய், ரூமெட்டிக் நோய், மூட்டு நோய், தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கு வெளிப் பூச்சாய் பயனளிக்கிறது.வெட்டிவேர் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும் என்பது முன்னோர் உரைத்த மொழி. அதை முன்மொழியும் சுஷ்ருத மற்றும் சாரக சம்ஹிதைகள், வெட்டிவேரை காய்ச்சல், சளி, அலர்ஜி, வயிற்று அழற்சி, வாந்தி பேதிக்கும் பரிந்துரைக்கிறது.

சிறுநீர்த் தொற்று, மஞ்சள் காமாலை, குடல் அழற்சி, புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு உடல் வலிமை சேர்க்கவும் வெட்டிவேர் உதவுகிறது.
மூளையின் நரம்புகளை ஊக்கப்படுத்துவதன் வாயிலாக, ஆண்மைத் தன்மையை அதிகரித்து, கருவுறுதல் விகிதத்தையும் அதிகப்படுத்துவதாய் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம், இதனை மருந்தாய் உட்கொள்ள பரிந்துரைத்தாலும், சரியான தரவுகள் இன்மையால், ஆங்கில மருத்துவம் உட்கொள்ள ஏற்கவில்லை. குறிப்பாக பெண்கள் கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் போதும் வெட்டிவேர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் கோடைக்காலத்தைக் கடப்பதற்கு வெட்டிவேர் பெரிதும் துணை நிற்கிறது என்பதே உண்மை. மண்பானைகளில் மஸ்லின் துணிகளில் கட்டிய வெட்டிவேரின் நீர்
பருகவும், வெட்டிவேரில் ஊறிய நீர் குளிக்கவும் பயன்படுகிறது. சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் வெட்டிவேரை ‘ஓமலிகை’ எனும் பெயரில் குறிப்பிட்டு, குளிக்கும் போது மக்கள் உடலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்நாட்களில் வீடுகளின் கூரைகளிலும், ஜன்னல்களிலும் வெட்டிவேர் வேயப்பட்டதுடன், வெட்டிவேரால் வேய்ந்த பாய்களில் படுத்தே வெப்பத்தை போக்கினர் என்பதாலேயே, இயற்கை ஏசி எனவும் போற்றப்படுகிறது.

திருவிதாங்கூர், குப்த, முகலாய மற்றும் ஹர்ஷவர்த்தனர் உள்ளிட்ட அரசவைகளில் வெட்டிவேரின் நறுமணம் பெரும்பங்கு வகித்துள்ளது. குறிப்பாக கன்னூஜ் நகரில், ‘கஸ் அத்தர்’ எனும் பெயருடன் பிரபலமான நறுமண எண்ணெயாக விளங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, பாபிலோனிய மற்றும் சீன மருத்துவ முறைகளில் வெட்டிவேர் எண்ணெய் பல நோய்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அழகு சாதனப்பொருட்கள், வாசனை திரவியங்கள், கூந்தல் எண்ணெய், சோப், ஆஃப்டர்-ஷேவ் லோஷன் மற்றும் மாஸ்சரைசிங் க்ரீம் தயாரிக்கவும் இதன் எண்ணெய் பயன்படுகிறது. Chanel, Opium, Dior, Givenchy போன்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், வெட்டிவேரின் நறுமணத்தை உபயோகப்படுத்தி தங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்தியுள்ளன.
வெட்டிவேரில் பாய், கூடை, கயிறு, படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகள், காலணி, தொப்பி, மெழுகுவர்த்திகள், தூபங்கள், கைவினைப் பொருட்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. இதன் புற்கள் மாட்டுத் தீவனமாகவும், காளான் வளர்ப்பிலும் பயன்படுகிறது. இதன் பிரத்யேக மணத்தால் தேநீர், சர்பத், ஜூஸ், லஸ்ஸி, மில்க் ஷேக், ஐஸ்கிரீம் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுவதுடன், இதன் பொடி மதுபானங்களிலும் புகையிலைகளிலும் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படுகிறது.

மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் வளரும் புல் வகையைச் சேர்ந்த இவற்றின் வேர்கள் அடர்த்தியாய், ஆழமாய் வளரும் தன்மை கொண்டவை. தண்டுகளிலிருந்து பயிரிடப்படும் வெட்டிவேரில், தானாகவே விளையும் காட்டு வகையும் இருக்கிறது. இதில் தென்னாட்டில் விளையும் வேர்கள் அடர்த்தியானவை என்றும், வடநாட்டில் விளையும் வேர்கள் அதிக மணம் கொண்டவை என்றும் கூறப்படுகிறது.

பயிரிட்ட 18-24 மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. உலகளவில் வெட்டிவேரை அதிகம் விளைவிப்பது ஹெய்ட்டி, இந்தியா, ஜாவா, பிரேசில், இலங்கை, இந்தோனேசியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாடுகளே. தற்போது அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது. மண்ணின் கடினத் தன்மையை குறைத்து, நச்சுகளைப் போக்கி, மண்வளத்தைப் பெருக்கி, பூச்சிவிரட்டியாகவும் செயல்படும் வெட்டிவேர், பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருந்தும், மண் வளம் பெருக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது 1980களில்தான். மண் அரிப்பைக் கட்டுப்படுத்த உதவும் இதன் அடர்த்தி நிறைந்த வேர்கள், மழை நீரைத் தடுத்து, நீர் பூமிக்குள் ஊடுருவவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் உதவுகிறது.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த வெட்டிவேரை ஊடுபயிராக பயிரிடும் போது, பிற பயிர்களுக்கும் நன்மை ஏற்படுத்துகிறது. எனவே, இயற்கை சமநிலையை எட்ட, வெட்டிவேர் க்ராஷ் டெக்னாலஜி(VGT) எனும் பெயரில், அதிகளவில இதனை நடச் சொல்லி, உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனைத்து நாடுகளையும் வற்புறுத்தி வருகின்றன.‘வேருக்கும் வாசம் வந்ததுண்டோ’ எனும் வரிக்கு வலுச்சேர்த்து, அதனை உண்மையாக்கி, வினைகள் பல தீர்க்கும் வெட்டிவேருடன் நறுமணமும், புத்துணர்ச்சியும் பெருகட்டும்! அகமும் புறமும்சிறக்கட்டும்! மண்வளமும் மனித வளமும் நிறையட்டும்!

(இயற்கை பயணம் நீளும்…)