×

ஹர்திக், இஷான், ஜெய்ஸ்வாலுக்கு கடிவாளம்; கேர்ல் பிரெண்ட் கலாசாரம் ஒழிக்க பிசிசிஐ தீவிரம்: புதிய விதிகளை வகுக்க நடவடிக்கை

மும்பை: ஐபிஎல்லில் ஆடிவரும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெண் நண்பிகளை அழைத்து வருவதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய விதிகளை வகுப்பதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஐபிஎல்லில் சமீப காலமாக கேர்ல் பிரெண்ட் கலாசாரம் அதிகரித்து வருகிறது. ஹர்திக் பாண்ட்யா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷண், அர்ஷ்தீப் சிங் போன்ற முன்னணி வீரர்கள் தங்கள் பெண் நண்பிகளுடன் அடிக்கடி உலா வருவது இயல்பான ஒன்றாகி வருகிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கான பேருந்துகளிலும், ஓட்டல்களிலும், தங்கள் கேர்ல் பிரெண்ட்களை, முன்னணி வீரர்கள் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய விதிகளை பிசிசிஐ வகுத்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது: ஐபிஎல் போட்டிகளில் ஆடிவரும் வீரர்களில் பலர் தங்கள் பெண் நண்பிகளை உடன் அழைத்து வருகின்றனர்.

அவர்களில் பலர் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளனர். அவர்கள் மூலம், முக்கிய தகவல்கள் வெளியாகும் ஆபத்து உள்ளது. பல பெண் நண்பிகள், சூதாட்ட செயலிகளுக்காக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். தவிர, இவர்களால் வேறு பிரச்னைகள் எழும் அபாயமும் உள்ளது. இதன் மூலம், ஐபிஎல் மற்றும் வீரர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே, இதை தடுக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க, பிசிசிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.

Tags : Hardik ,Ishan ,Jaiswal ,BCCI ,Mumbai ,IPL ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி..!