‘உலகில் மிகப்பெரிய விதை’: திகைக்க வைக்கும் திருவோடு மரம்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் வளாகத்தில் உள்ள திருவோடு மரம் காய்த்துள்ள நிலையில், அதை பக்தர்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். திருவோடு என்பது அட்சய பாத்திரம், கபாலம் போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. திருவோடு மரத்தின் முற்றிய காயை இரண்டாக வெட்டி காய வைத்தால் கிடைக்கும் இந்த திருவோட்டின் சிறப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கும். திருவோடு என்பது சன்னியாசிகள் வைத்து கொள்வது. பொதுவாக இந்த மரங்களை வீட்டில் வளர்ப்பதில்லை. திருவோட்டையும் வீட்டில் வைத்து கொள்வதில்லை. கோயில்களில் சிவபெருமான் பிக்ஷாடனர் வடிவத்தில், கையில் இந்த திருவோடு ஏந்தி இருப்பதை காணலாம். இது சிவனடியார்களின் புனித பொருளாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய விதை இந்த திருவோடு காய்தான்.

திருவோடு மரத்தின் பூர்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா ஆகும். இந்த மரத்தின் விதைதான் திருவோடு செய்ய பயன்படுகிறது. இந்த மரத்தின் பூக்கள் நறுமணம் மிக்கவை. இதனை தேடி வவ்வால்கள் அதிகம் வருகின்றன. இவைதான் மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன. திருவோட்டுக்காய் பெரிய தேங்காய் சைசில் இருக்கும். முற்றிய காய் உதிர்ந்து விழும். அதனை இரண்டாக பிளந்து நன்கு காய வைத்து, திருவோடாக பயன்படுத்தப்படுகிறது.

திருவோடு மரம் 30 அடி உயரம் வரை வளரும். இதன் பட்டை மென்மையாகவும், இலைகள் அகலமாகவும் காணப்படும். திருவோட்டின் காய், பூசணிக்காய் போல் பெரிய அளவில் காணப்படும். இது மரத்தில் 7 மாதங்கள் வரையில் இருந்தால்தான் நன்கு முதிர்ந்து, ஓடு பகுதி நல்ல தடிமனாக வரும். இதனை கொண்டு அலங்கார பொருட்கள், அழகுப்பெட்டிகள், ஆபரணங்கள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இதில் அழகான படங்கள் வரைந்து தட்டு, கப்புகள், இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுத்துகின்றனர். பிரேசிலில் உணவை பரிமாறும் பாத்திரங்களாக பயன்படுத்துகின்றனர்.இந்த ஓட்டில் உணவு வைத்தால் விரைவில் கெடாது. உடலுக்கு வலுவையும் கொடுக்கும். அதனால்தான் நம் நாட்டில் துறவிகள் இதனை பயன்படுத்துகின்றனர் போலும்.

இந்த காய்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதன் உலர்ந்த பழங்கள் மற்றும் ஓட்டின் உட்புறம் உள்ள ஏராளமான வேதிப்பொருட்கள் வயிற்று உபாதைகளுக்கும், நுரையீரல் மற்றும் சிறுநீர் தொற்றை போக்கவும் பயன்படுகின்றன. உடலை குளிர்ச்சி அடைய செய்யவும், வயிறு மற்றும் குடல் புண்களை போக்கவும் பயன்படும் சிறந்த மூலிகை காய் இது. திருவோடு மரம் சைவ மடங்களிலும், சில கோயில்களில் தல விருட்சமாகவும் உள்ளது. இந்த மரத்தை, நம்மூரில் சாகுபடி செய்யலாம். நம்மூர் மலை மண்ணுக்கு அருமையாக வளர்கிறது. இது 30 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. மூலிகை மருத்துவ பயிர்களில், சிறந்த மர சாகுபடி என திவோடு மரத்தை கூறலாம்.

Related Stories: