5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்; விமான விபத்தில் பலியான அஜித் பவாரின் மனைவி வெற்றி முகம்: துணை முதல்வர் பதவியை தக்கவைக்க வாய்ப்பு

புதுடெல்லி: ஐந்து மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி கோவாவின் போண்டா தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ரவி நாயக் மற்றும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவின் ராகுரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ., சிவாஜி கர்திலே ஆகியோர் மரணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, 2025ம் ஆண்டு டிசம்பரில் திரிபுரா சட்டசபை சபாநாயகர் விஸ்வ பந்து சென் காலமானார்.

கடந்த ஜனவரி 28ம் தேதி நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும், கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எச்.ஒய்.மேட்டி மற்றும் ஷாமனூர் சிவசங்கரப்பா, குஜராத் பாஜக எம்.எல்.ஏ., கோவிந்த் பார்மர் மற்றும் நாகாலாந்து பாஜக எம்.எல்.ஏ., இம்காங் எல். இம்சேன் ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்ததால் அந்தந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.

இதில் கோவா போண்டா தொகுதி தேர்தலை மட்டும், சட்டசபையின் பதவிக்காலம் முடிய ஓராண்டுக்கும் குறைவாக உள்ளதாகக் கூறி மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மற்ற ஏழு தொகுதிகளிலும் கடந்த 9ம் தேதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

மேற்கண்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், தனது துணை முதல்வர் பதவியை தக்கவைக்க இந்த தேர்தலில் வெற்றி பெறுவது கட்டாயமாகும். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆகாஷ் மோர் தனது மனுவை வாபஸ் பெற்றதால் சுனேத்ரா பவாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கர்நாடகாவின் பாகல்கோட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்.எல்.ஏ.,வின் மகன் உமேஷ் மேட்டியும், பாஜக சார்பில் வீரபத்ரய்யா சரந்திமத்தும் களம் காண்கின்றனர்.

அதேபோல் குஜராத்தின் உம்ரேத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்ஷத் பார்மர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் பிருகுராஜ் சிங் சவுகான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிபுராவின் தர்மநகர் மற்றும் நாகாலாந்தின் கோரிடாங் தொகுதியிலும் பல முனை போட்டி நிலவி வரும் நிலையில், ‘வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்று வருவதாகவும், முடிவுகள் மாலைக்குள் முழுமையாக வெளியாகும்’ என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: