புதுடெல்லி: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் 5,432 மையங்களில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் 551 நகரங்களில் 5,432 தேர்வு மையங்களில் நடந்தது. சுமார் 22.79 லட்சம் முதல் 26 லட்சம் வரையிலான மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். தேர்வைச் சீராக நடத்த 2 லட்சம் பணியாளர்கள், 6,000 பார்வையாளர்கள் மற்றும் 674 நகர ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையங்களில் பயோமெட்ரிக் முறையில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்ட இடங்களில், மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, தேசிய மருத்துவ ஆணையம் கடந்த 2ம் தேதி மற்றும் 3ம் தேதிகளில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதித்திருந்தது. மேலும், சமூக வலைதளங்களில் போலி வினாத்தாள்களைப் பரப்பி மோசடி செய்ய முயன்ற 120க்கும் மேற்பட்ட டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஒன்றிய அரசு அடையாளம் கண்டு முடக்கியது. இது தொடர்பாக சுமார் 1,500 புகார்கள் பெறப்பட்ட நிலையில், முறைகேடுகளைத் தடுக்க 2024ம் ஆண்டு பொதுத் தேர்வுகள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தில் இது தொடர்பாக முறையான புகாரும் அளிக்கப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில் வினாத்தாள் கசிவு குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் உறுதி செய்யப்படவில்லை. தேர்வு முடிந்துள்ள நிலையில், தற்காலிக விடைக் குறிப்புகள் இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். ெதாடர்ந்து ஜூன் மாதம் இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் ‘நாடு முழுவதும் நீட் தேர்வுகள் சுமூகமாக நடந்து முடிந்துள்ளன; மாணவர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
70 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்
தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) நீட் நுழைவுத்தேர்வை எழுத நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வயது வரம்பை ஏற்கனவே ரத்து செய்துவிட்டது. இதற்கு முன்பு பொதுப் பிரிவினருக்கு 25 வயது என்றும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயது என்றும் இருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில், அசோக் பகார் என்ற முதியவர் தனது 70 வயதில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மறைந்த தனது தாயின் நீண்டகால ஆசையை நிறைவேற்றவும், சமூகத்திற்குச் சட்டப்பூர்வமாக மருத்துவச் சேவை செய்யவும் இந்த முதிர்ந்த வயதில் அவர் தேர்வெழுதியுள்ளார். மற்ற தேர்வர்களைப் போலவே அசோக் பகார் தீவிர சோதனைக்குப் பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். இவரது மனைவி ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதுடன், குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தினால் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
