சென்னை: இந்தியாவில் 5,432 மையங்களில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடைபெற்றது. 22.79 லட்சம் மாணவர்கள் எழுதினர். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதனால் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தக் கல்வியாண்டுக்கான நீட் யுஜி 2026 தேர்வு நாடு முழுவதும் நேற்று அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்தது. தேசிய அளவில் 552 நகரங்களிலும், வெளிநாட்டில் 14 நகரங்களிலும் சேர்த்து 5,432 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 22,79,743 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகம் முழுவதும் 2 லட்சம் மாணவர்கள் எழுதினர். சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் குளறுபடிகள், மோசடிகள் நடைபெறாமல் இருக்க பல்வேறு கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மாணவிகளுக்கு பெண் போலீசார், மாணவர்களுக்கு ஆண் போலீசார் மூலம் தீவிர சோதனை நடைபெற்றது. டிடெக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. கை, கால், தலைமுடி, காது, பாக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். மேலும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு, சிசிடிவி கண்காணிப்பு, பிரிண்டர்/கேமரா தடை போன்றவை கடுமையாக அமல்படுத்தப்பட்டன. ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் விதமாக, நீட் தேர்வு நடைபெறும் மே 3 மற்றும் அதற்கு முந்தைய நாளான மே 2 ஆகிய இரு நாட்களும் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டாம். அத்தியாவசிய காரணங்கள் இருந்தால் மட்டும் விலக்கு அளிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி, மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மாலை 2 மணி முதல் 5 மணி வரை (3 மணி நேரம்) நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் (ஒவ்வொன்றும் 4 மதிப்பெண்கள்) கேட்கப்பட்டன. மொத்தம் 720 மதிப்பெண்கள். ஒரு தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வு சரியாக 2 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு எழுதி வெளியில் வந்த மாணவர்கள் உயிரியல் பிரிவு எளிதாக இருந்ததாகவும், வேதியியல் சராசரியாகவும், இயற்பியல் சற்று கடினமாகவும் இருந்ததாக தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக சற்று எளிதாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர். நீட் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (ஜூன் 2026) வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. அதன்பின் கவுன்சலிங் செயல்முறை தொடங்கும்.
