பிஇ, பிடெக் சேர்க்கை ஜூன் 2வரை விண்ணப்பிக்கலாம்

 

சென்னை: தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவுக்கு ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கவுன்சலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாகப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் பிஇ, பிடெக் இளநிலை பட்டப்படிப்புகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவ மாணவியரை சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு மே 3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரையில் நடக்கிறது. மேற்கண்ட படிப்புகளில் சேர்க்கை பெற விரும்புவோர் www.tneaonline.org என்ற இ ணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு ரூ.500,எஸ்சி, எஸ்சிஏ, மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ. 250 செலுத்த வேண்டும்.

இணைய தள வசதி இல்லாத மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் விண்ணப்ப பதிவு மற்றும் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள உதவும் 110 பொறியியல் சேர்க்கை உதவி மையங்களின் மூலம் பதிவு செய்யலாம். அதற்கான முகவரிகள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையில் தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய 10 இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையங்கள் தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி 1800-425-0110 எண்ணை பயன்படுத்தலாம். மேலும் மாணவர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தங்களின் சந்தேகங்களை நிர்த்தி செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டில் கவுன்சலிங்கில் பங்கேற்ற கல்லூரிகள் எண்ணிக்கை 443. மொத்த இடங்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 585 இடங்கள், சேர்க்கை பெற்றவர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 841 பேர் கடந்த ஆண்டில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

இதையடுத்து, இந்த ஆண்டுக்கான சேர்க்கை மே 3ம் தேதி தொடங்கும். விண்ணப்பங்கள் சரிபார்க்கும் நாள் ஜூன் 2ம் தேதி, அசல் சான்றுகளை பதிவேற்றுவது ஜூன் 6ம் தேதி. சான்றுகள் சரிபார்ப்பு ஜூன் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கும். இதையடுத்து, தரவரிசை பட்டியல்கள் ஜூன் 29ம் தேதி வெளியிடப்படும். சேவை மையங்கள் மூலம் குறைகளை நிவர்த்தி செய்வது ஜூன் 30ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நடக்கும். அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் மாணவர்களுக்கான கவுன்சலிங்கில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு நடக்கும். பொதுப்பிரிவு மற்றும் சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு கவுன்சலிங், பொதுக் கவுன்சலிங் ஆகியவை இணை தளம் மூலம் நடத்தப்படும். இதற்கான தேதி, துணைக் கவுன்சலிங் தேதி, எஸ்சி ஏ காலியிடம் , எஸ்சி வகுப்புக்கான கவுன்சலிங் ஆகியவையும் இணைய தளம் மூலம் நடக்கும் அதற்கான தேதி ஏஐசிடிஇ அனுமதி கிடைத்தபின் அறிவிக்கப்படும்.

 

Related Stories: