பெசன்ட் நகர் கடற்கரை அருகே நண்பருடன் காரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது: மிரட்டி ரூ.11,000 பறித்தார்

சென்னை: நண்பருடன் காரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்து, மிரட்டி ரூ.11,000 பறித்த காவலர் கைது செய்யப்பட்டார். அடையாறு பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி, இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தன்னுடன் பயிலும் நண்பர் ஆதம்பாக்கம் இ.பி.காலனி 1வது தெருவை சேர்ந்த ஆதித்யா வத்சன் (20) என்பவருடன், கடந்த 29ம் தேதி இரவு பெசன்ட் நகர் குறுக்கு தெரு சந்திப்பில் காரை நிறுத்திவிட்டு, காரின் பின் சீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஆசாமி, காரின் அருகே வந்து டார்ச் அடித்து உள்ளே பார்த்துள்ளார்.

அப்போது, காரின் முன் கதவு திறந்து இருந்ததால் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, தன்னை சாஸ்திரி நகர் காவல்நிலைய போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். பின்னர், நீங்கள் யார், இருளில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்,’ என மிரட்டும் தொணியில் விசாரித்துள்ளார். அதற்கு அவர்கள், நாங்கள் இருவரும் நண்பர்கள், கடற்கரைக்கு வந்தோம். பின்னர், சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம், என்று கூறியுள்ளனர். ஆனால், அவர் இருவரையும் செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர், அவர்களது செல்போன் மற்றும் அவர்களது பெற்றோர் செல்போன் எண்ணை பெற்று, நீங்கள் இருவரும் காரில் தவறு செய்ததால் உங்களது பெற்றோரிடம் கூறப்போகிறேன் என்றும், அவ்வாறு சொல்லாமல் இருக்க பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து கல்லூரி மாணவி வங்கிக்கணக்கில் இருந்தும் ஜிபே மூலம், அவரது வங்கி கணக்கிற்கு ரூ.3000 அனுப்ப செய்தாராம். பின்னர், அந்த நபரே காரை ஓட்டிச்சென்று பெசன்ட்நகர் 3வது பிரதான சாலையில் ஐஓபி வங்கியின் ஏடிஎம்முக்கு அருகே நிறுத்தியுள்ளார். கல்லூரி மாணவனை ஏடிஎம்க்கு சென்று ரூ.8,000 எடுத்து வருமாறு கூறியுள்ளார். ஏடிஎம்மிற்கு சென்ற ேபாது, மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். கல்லூரி மாணவன் பணத்தை எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதன்பின், இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உங்கள் புகைப்படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன், என மிரட்டி விட்டு அந்த நபர் சென்றுள்ளார்.

இதனால் பயந்து போன மாணவி, இச்சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. கடந்த 30ம் தேதி தனக்கு நேர்ந்தவற்றை தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஜோசப் (30) என்ற காவலரை கைது செய்து விசாரித்தனர். கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் அயல் பணியாக உயர் நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றிய இவர், மாணவியிடம் அத்துமீறியதுடன், பணம் பறித்ததம் தெரியவந்துள்ளது. இவர், இதுபோல் எத்தனை பேரிடம் கைவரிசை காட்டியுள்ளார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: