×

தாமஸ் கோப்பை பேட்மின்டன்: அரை இறுதியில் இந்தியா; லக்சயா சென், ஆயுஷ் அமர்க்கள வெற்றி

ஹார்சன்ஸ்: தாமஸ் கோப்பை பேட்மின்டன் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்தியா 3-0 என்ற கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. தாமஸ் கோப்பை பேட்மின்டன் போட்டிகள், டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியா, சீன தைபே அணிகள் மோதின. முதலில் நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென், சீன தைபேவை சேர்ந்த உலகின் 6ம் நிலை வீரர் சோ டியன் சென் உடன் மோதினார்.

அப்போட்டியின் முதல் செட்டை 18-21 என்ற புள்ளிக் கணக்கில் இழந்த லக்சயா சென், அடுத்த இரு செட்களில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி 22-20, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் இரு செட்களையும் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் அவர் வென்றார். அதையடுத்து நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை, சீன தைபேவை சேர்ந்த ஆசிய விளையாட்டு சாம்பியன்கள் சியு ஹிசியாங் சீ, வாங் சி லின் இணை உடன் மோதினர்.

அப்போட்டியின் முதல் செட்டை, 23-21 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய இணை கைப்பற்றியது. 2வது செட்டை 21-19 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே இணை வசப்படுத்தியது. அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 21-12 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய இணை கைப்பற்றியது. அதனால், 2-1 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றி வாகை சூடியது. அதன் பின் நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீன தைபேவின் லின் சுன் யி உடன் மோதினார். அப்போட்டியில் அட்டகாசமாக ஆடிய ஆயுஷ், 21-16, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடினார். அதனால், 3-0 என்ற கணக்கில் சீன தைபே அணியை ஒயிட் வாஷ் செய்த இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

Tags : Thomas Cup badminton ,India ,Lakshya Sen ,Ayush Amarkala ,Horsnes ,Chinese Taipei ,Thomas Cup ,Horsnes, Denmark ,
× RELATED ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டி டெல்லி அணி அபார வெற்றி