மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஃபில்ஸ், செக் வீரர் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஃபில்ஸ், செக் வீர் ஜிரி லெஹெக்கா மோதினர்.
போட்டியின் முதல் செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்தர், 6-3 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் அந்த செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட், பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் பிளாக்ஸ் களம் கண்டனர். துவக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றிய பிளாக்ஸ், முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், அந்த செட்டையும் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
