ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 43வது போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (6 ரன்), வைபவ் சூர்யவன்ஷி (4 ரன்) முதல் இரு ஓவர்களில் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றினர். பின், துருவ் ஜுரெல், கேப்டன் ரியான் பராக் இணை சேர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர்.
இந்த இணை 102 ரன்கள் விளாசிய நிலையில், 3வது விக்கெட்டாக துருவ் ஜுரெல் (30 பந்து, 42 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 20 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரை அடுத்து, சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரியான் பராக் (50 பந்து, 5 சிக்சர், 8 பவுண்டரி, 90 ரன்) மிட்செல் ஸ்டார்க் பந்தில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் டொனொவன் பெரேரா, ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களம் இறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 226 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
