திரிணாமுல் காங்கிரசின் கோட்டையான 142 தொகுதிகளில் இன்று இறுதிகட்ட தேர்தல்: மே.வங்கத்தில் உச்சகட்ட பாதுகாப்பு; 5 மாநிலங்களில் தேர்தல் முடிகிறது; மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் கோட்டையான 142 தொகுதிகளில் 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இத்துடன் 5 மாநில தேர்தல் முடிவடைந்து, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதைத் தொடர்ந்து மீதமுள்ள 142 தொகுதிகளில் 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தல் வடக்கு வங்கம் மற்றும் அதை ஒட்டி மாவட்டங்களில் நடந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் கோட்டையான கொல்கத்தா, ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், நாடியா, ஹூக்ளி மற்றும் பூர்பா பர்தமான ஆகிய தெற்கு வங்க மாவட்டங்களில் நடக்க உள்ளது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்த 142 தொகுதிகளில் 123 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜ வெறும் 18 இடங்களில் மட்டும் வென்றது. ஐஎஸ்எப் கட்சி ஒரு இடத்தை கைப்பற்றியது. கடந்த தேர்தலிலேயே பாஜவின் வளர்ச்சி வலுவாக இருந்த போதிலும், தெற்கு வங்கப் பகுதியில் திரிணாமுல் காங்கிரசின் அசுர வெற்றி தான் மம்தா பானர்ஜி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது.

எனவே இம்முறையும் திரிணாமுல் காங்கிரஸ் 4வது முறையாக ஆட்சியை கைப்பற்ற இன்றைய 2ம் கட்ட தேர்தல் நடக்கும் 142 தொகுதிகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இம்முறை ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பாஜவுக்கும் 2ம் கட்ட தேர்தல் மிக முக்கியமாக இருப்பதால், திரிணாமுல் காங்கிரசின் கோட்டையை தகர்க்க பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பாஜ தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, 2ம் கட்ட தேர்தலில் உச்ச கட்ட மோதல் நிலவும் தொகுதியாக மம்தா பானர்ஜியின் பவானிபூர் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இங்கு, மம்தாவை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான பாஜ மாநில தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். கடந்த 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை சுவேந்து அதிகாரி வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தார். அதன் பின், பவானிபூரில் நடந்த இடைத்தேர்தலில் மம்தா போட்டியிட்டு எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.

எனவே நந்திகிராம் தோல்விக்கு பதிலடி தர இம்முறை மம்தா பானர்ஜி பவானிபூரில் கடுமையான பிரசாரங்கள் செய்துள்ளார். இங்கு அவரது வெற்றி, கவுரவ பிரச்னையாகவும் மாறியிருக்கிறது. பவானிபூரில் எஸ்ஐஆர் மூலம் 51,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது அத்தொகுதியில் 25 சதவீத வாக்குகள் ஆகும். முதல்கட்ட தேர்தலில் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

பாஜ வேட்பாளர் விரட்டி விரட்டி தாக்கப்பட்டார். எனவே இம்முறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய படையினர் அனைத்து தொகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுடன் இன்றோடு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

* வங்கதேச எல்லையில் கட்டுப்பாடு
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் வங்கதேச எல்லைப் பகுதிகள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள 33 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடப்பதால் வங்கதேச எல்லையை கடக்கவும் உள்ளே வரவும் இன்று மாலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பெட்ராபோல் தரைவழி துறைமுகத்திற்கு செல்லும் பாதையிலும் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* 1,468 பேர் வாக்களிக்க அனுமதி
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் மூலம் பலர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்டவர்களின் பெயர்களை சரிபார்த்த தீர்ப்பாயம், நேற்று முன்தினம் வரையிலும் உரிய ஆவணங்களை சமர்பித்த 1,468 பேரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டது. அதன்படி, 1,468 பேரும் 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி வழங்கியது.

* நீ சிங்கம்னா… நா புஷ்பாடா…!
தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பால்டா பகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானுக்கும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உபியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. வாக்காளர்கள் மிரட்டப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி அஜய், வேட்பாளர் ஜஹாங்கீர் கான் வீட்டிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து ஜஹாங்கீர் ஆதரவாளர்கள் ஐபிஎஸ் அதிகாரி வீட்டின் முன்பாக நேற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட், சிங்கம் என அடைமொழியுடன் அழைக்கப்படும் அஜய் குறித்து ஜஹாங்கீர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இது மேற்கு வங்கம். அவர் சிங்கம் என்றால், நான் புஷ்பா. உபியிலிருந்து பாஜவால் நியமிக்கப்பட்டு இங்கு வந்த ஐபிஎஸ் அதிகாரி மிரட்டல், அச்சுறுத்தல் விடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

Related Stories: