×

நீர்வரத்து இல்லாதது, வெயிலின் தாக்கம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைகிறது

*45.65 அடி இருப்பு உள்ளது

காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர்வரத்து இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர் வற்றக்கூடிய சூழல் நிலவி வருகிறது.காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி.

இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மேலும் தமிழகத்தின் மிகப்பெரிய நான்காவது ஏரியான வீராணம் ஏரியில் இருந்து 2004ம் ஆண்டு முதல் புதிய வீராணம் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர குடிநீருக்காக வினாடிக்கு 78 கன அடி வீதம் தண்ணீர் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டு, 73 கன அடி வீதம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

பாசனத்திற்கு அதிகபட்சமாக ஏரியின் நீர் இருப்பு மற்றும் தேவைக்கேற்ப வினாடிக்கு 73 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் தேவையில் நான்கில் ஒரு பகுதியை வீராணம் ஏரி பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியின் மூலம் 34 பாசன மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசனம் பெறுகிறது.

ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்படும் நிலையில், ஏரியின் நீர்மட்டம் குறைந்தால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

தற்போது கீழணையிலிருந்து வடவாறு வழியாக நீர்வரத்து இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர் வற்றக்கூடிய சூழல் நிலவி வருகிறது.இதன் முழு கொள்ளளவான 47.50 அடியில், தற்போது 45.65 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

சென்னை குடிநீருக்காக மட்டும் தினந்தோறும் 73 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதே போல தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் ஏரியின் நீர்மட்டம் சரிவை காணும். அப்போது ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதை நிறுத்தும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Veeranam Lake ,Kattumannarkovil ,Keelanai ,Vadavaru ,Lalpettai ,Kattumannarkovil… ,
× RELATED பைக்காரா, பார்சன்ஸ்வேலியில் 13வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ