×

ஓசூர் வட்டாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு கருகிய சாமந்தி பூக்கள்

*விவசாயிகள் கவலை

ஓசூர் : ஓசூர் சுற்றுவட்டார பகுதியில், கடும் வெயிலால் வெள்ளை சாமந்தி பூக்கள் செடிகளிலேயே கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் மற்றும் மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். குடில் அமைத்தும், திறந்தவெளியில் சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

இங்கு ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி மற்றும் பல்வேறு அலங்கார மலர்களை, ஆண்டு முழுவதுமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்கின்றனர். இதில் வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி பூக்களை மட்டும், சுமார் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ளனர்.

சாமந்தி பூக்கள் ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதூர்த்தி உள்ளிட்ட விழாக்களை குறிவைத்து சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சாமந்தி பூக்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி பெங்களூரு, ஆந்திரா ம்றறும் வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

நடப்பாண்டு தொடர் மழை காரணமாக சாமந்தி பூக்களில், நோய் தாக்கம் ஏற்பட்டது. அதேபோல் கடும் பனிப்பொழிவாலும் சாமந்தி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களின் வரத்து குறைந்து, விலை உயர்ந்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

எங்கள் பகுதிகளில் பெரும்பாலும் வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி பூக்கள் சாகுபடி செய்வது வழக்கம். இதில் மஞ்சள் சாமந்திக்கு அனைத்து சீசன்களிலும் நல்ல வேரவேற்பு உள்ளது. ஆனால் வெள்ளை சாமந்தி முக்கிய விழாக்கள் மற்றும் ஓணம் பண்டிகையின் போது மட்டுமே விற்பனையாகும்.

மஞ்சள் சாமந்திக்கு இருக்கும் விலை, வெள்ளை சாமந்திக்கு கிடைப்பதில்லை. வெள்ளை சாமந்தி செடிகள் நடப்பட்ட 3 மாதத்தில் பூக்கள் பூத்து அறுவடைக்கு தயாரகி விடும். ஏக்கருக்கு 1 டன் வரை மகசூல் கிடைக்கும். மாத்திற்கு 4 முறை அறுவடை செய்து வந்தோம். இந்நிலையில், கடந்த மாதம் ஒரு கிலோ வெள்ளை சாமந்தி ரூ.20க்கு விற்பனையானதால், அறுவடை கூலி, வாகன வாடகைக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை.

இதனால் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் அப்படியே விட்டு விட்டோம். தற்போது பூக்கள் விலை உயர்ந்து உள்ளதால், மீண்டும் தண்ணீர் பாய்ச்சினோம், பூக்கள் நன்றாக விளைந்தது. ஆனால் கடும் வெயில் காரணமாக வெள்ளை சாமந்தி சுருங்கி, கருகியது.

மார்க்கெட்டில் தரம் இல்லாத பூக்களுக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டு விட்டோம். வெயில் இல்லை என்றால், இன்னும் 2 மாதம் வரையிலும் அறுவடை செய்திருப்போம். வெயிலால் பூக்கள் வாடியதால் விளைச்சல் பாதித்து, இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Hosur district ,Hosur ,Krishnagiri district ,Thali ,Kelamangalam ,Thenkanikottai ,Bagalur ,Soolagiri ,
× RELATED பைக்காரா, பார்சன்ஸ்வேலியில் 13வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ