×

கோடியக்கரை அருகே நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: ஜிபிஎஸ் கருவிகள், மீன்பிடி வலைகள் பறிப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் செருதூரிலிருந்து மணிவாசகன் (46) என்பவரது பைபர் படகில், அவரும் அதே பகுதியை சேர்ந்த வேலு(48), சக்திவேல் (36) உள்பட 5 பேர் கடந்த 25ம்தேதி காலை 10 மணியளவில் மீன்பிடிக்க சென்றனர். 26ம்தேதி நள்ளிரவு 12 மணியளவில் ஆறுகாட்டுத்துறைக்கு கிழக்கே 12நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 3 பைபர் படகில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள், படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி தாக்கினர். இதில் மணிவாசகன், வேலு, சக்திவேல் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இவர்களிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி, 2 செல்போன், 40 கிலோ மீன், மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர். நேற்று காலை செருதூர் திரும்பிய 3 பேரும், நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரிலிருந்து சதீஷ் (43) பைபர் படகில் மோகன் (48), பார்த்தசாரதி (40), ராஜேஷ் (42)ஆகியோருடன் கடந்த 25ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு மீன்பிடிக்க சென்றார். 26ம்தேதி நள்ளிரவு 12 மணியளவில் கோடியக்கரைக்கு கிழக்கே பைபர் படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீனவர்களை தாக்கி ஜிபிஎஸ் கருவி, சிலிண்டர், காஸ் அடுப்பு ஆகியவற்றை பறித்து சென்றனர். இந்த தாக்குதலில் சதீஷ், மோகன், பார்த்தசாரதி ஆகிய 3 பேர் காயமடைந்தனர். நேற்று காலை செருதூர் திரும்பிய 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாகப்பட்டினம் செருதூரை சேர்ந்த கோபால் (34) பைபர் படகில் பரமசிவம் (36), திருமுருகன் (37), சஸ்டிகன் (29) ஆகியோருடன் கடந்த 25ம் தேதி மீன்பிடிக்க சென்றார். 26ம் தேதி நள்ளிரவு கோடியக்கரைக்கு கிழக்கே 12 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் இலங்கை கடற்கொள்ளையர்கள் இவர்களை தாக்கி 50 கிலோ மீன்கள், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதில் கோபால், பரமசிவம் ஆகிய 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்கொள்ளையனை மடக்கினர்
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரிலிருந்து பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 பேர் கடந்த 25ம்தேதி மீன்பிடிக்க சென்றனர். நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே 9 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்தபோது பைபர் படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள், இவர்களது வலையை அறுக்க முயன்றனர். இதனால் நடுக்கடலில் இருதரப்பினர் இடையே தாக்குதலில் கடற்கொள்ளையர்களில் இலங்கை காங்கேசன் துறை வழலையை சேர்ந்த அயந்தன் (27) என்பவரை செருதூர் மீனவர்கள் மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேரும் பைபர் படகில் தப்பினர். பிடிபட்ட அயந்தன், தமிழில் பேசியதால் அவரை நேற்று காலைசெருதூர் அழைத்து வந்து கீழையூர் போலீசில் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த அயந்தன் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Kodiyakarai ,Nagapattinam ,Manivasaka ,Cherudhur ,Velu ,Sakthivel ,Arukattuthurai… ,
× RELATED உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க...