சென்னை: தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் மே 4ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடக்கிறது. தபால் வாக்கு எண்ணும் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகுதான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், 85.10% வாக்குப்பதிவு நடந்தது. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி மே 4ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும் உள்ள நிலையில், வாக்குகள் எண்ணும் வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4ம் தேதி (திங்கள்) அன்று 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற உள்ளது.
வாக்குகள் எண்ணும் வழிமுறைகள்
- வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு துவங்கும்.
- முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
- 30 நிமிடங்களுக்கு பிறகு, அதாவது காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும்.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்ட பின்தான் துவங்கப்படும்.
- ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேஜைகளில் எண்ணப்படும். இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
- 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தபால் வாக்குகள் - தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்தம் 3.60 லட்சம் அலுவலர்களில் வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2.88 லட்சம் அலுவலர்கள் (80%) தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
- இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற தேர்தல் Zonal/Sectorல் பணிபுரிந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3.36 லட்சம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், 1.10 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர்.
- 85+ மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12டி விண்ணப்பத்தின் பெயரில் மொத்தம் 1.73 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர்.
- இதுவரை சேவை வாக்காளர்கள் 18,000 பேர் வாக்களித்துள்ளனர். இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி அன்று காலை 8 வரை பெறப்படும்.
- வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் மட்டுமின்றி, கூடுதலாக 6.37 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
