கோடை விடுமுறை எதிரொலி; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்துக்காக வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருப்பதால், குடும்பம் குடும்பமாக வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் சித்திரை வசந்த உற்சவம் நடைபெற்று வருவதாலும் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. வசந்த உற்சவத்தின் 6ம் நாளான நேற்று அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் 3ம் பிரகாரத்தில் உள்ள மகிழ மரம் அருகே எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு, பொம்மை பூச்சொரியும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைதிறக்கும் முன்பே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தரிசன வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலையில் கோடை வெயில் 100 டிகிரியை கடந்து சுட்டெரித்தாலும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். மேலும், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரும் நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிரிவலம் வர உகந்த நேரம் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் நடைபெறும் கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இணையாக, சுமார் 30 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
அதன்படி, பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 1ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 30ம் தேதி இரவு 9.52 மணிக்கு தொடங்கி, 1ம் தேதி இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: