கோடை வெயில் தாக்கத்தால் பட்டாசு ஆலையில் அதிகாலை நேரத்தில் மட்டும் வெடிமருந்து கலக்க வேண்டும்: விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

 

புதுடெல்லி: பட்டாசு ஆலைகளில் வெயில் கால விபத்துகளைத் தவிர்க்க புதிய பாதுகாப்பு விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்கனவே நடந்த தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி நீதிமன்றம் முக்கிய ஆலோசனைகளை வழங்கியது.சமீபத்தில் கேரளாவின் திருச்சூர், தமிழ்நாட்டின் சிவகாசி போன்ற பகுதியில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் 38 பேர் பலியானார்கள்.

கோடைக்காலத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் உராய்வினால் ரசாயனங்கள் தானாகவே தீப்பற்றி வெடிப்பதைத் தவிர்க்க, வெடி மருந்து கலக்கும் பணிகளை அதிகாலை 6 மணி முதல் காலை 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என ‘பெசோ’ எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் பட்டாசு உற்பத்தியைத் தற்காலிகமாகத் தடை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசின் வெடிபொருள் திருத்த விதிகளின்படி, பட்டாசு ஆலைகளில் மருந்து கலக்கும் அறையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 2 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும். விபத்து நடந்தால் உயிர்ச் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்து கலக்கும் இடங்கள் மற்றும் இருப்பு வைக்கும் அறைகள் மற்றக் கட்டிடங்களில் இருந்து தனித்தனி பிரிவுகளாக இருக்க வேண்டும். ரசாயனங்களின் வீரியம் மதிய நேரங்களில் உச்சத்தை எட்டுவதால், இந்த விதிகளை மீறும் ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்.

 

Related Stories: