×

குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு பேரணி மணிப்பூர் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள்: காவல்துறையினருடன் மோதல்

இம்பால்: மணிப்பூரில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு முதல்வர் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மெய்டீஸ், குக்கி சோ, நாகா சமூகத்தினரிடையே ஏற்பட்ட இன மோதலில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 2 ஆண்டுகள் வன்முறை சம்பவங்கள் நீடித்து வந்த நிலையில் பாஜவை சேர்ந்த முதல்வர் என்.பிரேன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

வன்முறைகள் குறைந்து வந்த நிலையில், குடியரசு தலைவர் ஆட்சி அகற்றப்பட்டு மெய்டீஸ் இனத்தை சேர்ந்த ஒய். யும்னம் கெம்சந்த் சிங் மணிப்பூர் முதல்வராக கடந்த பிப்ரவரி மாதம் பதவி ஏற்றார். மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியில் முதல்வர் கெம்சந்த் சிங் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் இங்குள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மொய்ராங் ட்ராங்லாபி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கடந்த 7ம் தேதி மர்ம நபர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுவனும், அவரது சகோதரியும்(6 மாத குழந்தை) கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அதன்ஒரு பகுதியாக நேற்று 2 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டும், மாநிலத்துக்குள்ளேயே அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு மறுவாழ்வு கோரியும், மணிப்பூரில் நிரந்தர அமைதியை நிலைநாட்டவும் வலியுறுத்தி மெய்டீஸ் இனத்தின் மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மெய்டீஸ் இனத்தவர்கள் கலந்து கொண்டனர். நான்கு வெவ்வேறு இடங்களில் இருந்து சென்ற போராட்டக்காரர்கள் முதல்வர் இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர்.

இதையடுத்து இம்பாலின் மையப்பகுதியில் உள்ள கெய்சம்பட் சந்திப்பு, காங்லா கேட், கோனுங் மாமாங் மற்றும் மொய்ராங்கோம் ஆகிய முதல்வர் இல்லத்துக்கு செல்லும் நான்கு திசைகளிலும் கூடுதல் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. அப்போது இம்பால் கிழக்கில் உள்ள குரைலாம்லாகில், முதல்வர் இல்லத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் உடைக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாதுகாப்பு படையினர் முதல்வர் ஒய். யும்னம் கெம்சந்த் சிங்கை சந்திக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து முதல்வரை சந்தித்த மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழு, கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்தனர்.

Tags : Manipur CM ,Imphal ,Manipur ,CM ,Meites ,Kuki Cho ,Naga ,
× RELATED எந்த கட்சியில் சேர வேண்டும் என்பது...