×

தெலங்கானா ராஷ்டிர சேனா புது கட்சி தொடங்கினார் சந்திரசேகரராவ் மகள்: நரிகள், ஓநாய்களிடம் கைதியாக சிக்கிய கேசிஆர் என ஆவேசம்

திருமலை: தெலங்கானா மாநில அரசியல் களத்தில் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகரராவின் மகளும் முன்னாள் எம்பியுமான கவிதா நேற்று ‘தெலங்கானா ராஷ்டிர சேனா’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். தனது தந்தை கே.சந்திரசேகரராவ் மற்றும் தனது அண்ணன் ராமராவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு அவர்களது பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதையொட்டி மேட்சல் மாவட்டம் முஷிராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தனது புதிய கட்சியின் பெயரை அறிமுகப்படுத்தி கவிதா பேசியதாவது: தனித்தெலங்கானாவுக்கு பல இன்னல்களை சந்தித்து போராடி வெற்றி பெற்றோம். ஆனால் தெலங்கானாவை கொண்டுவந்தபோது கண்ட கனவுகள் தற்போது நனவாகவில்லை. தெலங்கானாவின் எதிர்காலத்தை மாற்றி எழுத நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பி.ஆர்.எஸ். கட்சியால் மாநில மக்களின் நலன் புரிந்துகொள்ள முடியவில்லை. புதிதாக உருவான மாநிலத்தில் செய்யவேண்டிய பணிகள் முறையாக செய்யப்படவில்லை.

முக்கிய அரசியல் பிரமுகர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பது போன்ற செயல்கள் தான் மாநிலத்தில் அதிகம் நடந்துள்ளது. தெலங்கானா மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். எனது தந்தையின் பி.ஆர்.எஸ் தொழில்நுட்ப ரீதியாக இருந்தாலும், அது தனது ஆன்மாவை இழந்துவிட்டது. பி.ஆர்.எஸ் தனது ஆன்மாவை இழந்ததால்தான் தெலங்கானா ராஷ்டிர சேனா பிறந்துள்ளது. சந்திரசேகரராவ் இனி, நம்முடையவர் அல்ல. அவர் வேறு ஒருவரின் ஆள். அக்காலத்து டி.ஆர்.எஸ். கட்சிக்காக என் ரத்தத்தையும், வியர்வையையும், நேரத்தையும் செலவிட்டேன்.

கட்சியை வலுப்படுத்த உழைத்தேன். அக்காலத்து கே.சி.ஆர். வேறு, இன்றைய கே.சி.ஆர்.வேறு. இன்றைய கே.சி.ஆர் எனது தந்தையாக இருந்தாலும் அவர் ஒரு வித்தியாசமான மனிதராகிவிட்டார். அவர் நம்முடையவர் அல்ல. பிரச்னைகள் எங்கு நடந்தாலும் அங்கு அவர் வரமாட்டார். நரிகள் மற்றும் ஓநாய்களின் கைகளில் எனது தந்தை கைதியாகிவிட்டார். ஒன்றிய அரசுடன் சண்டை போடாமல் இருந்திருந்தால் பாலமூர் திட்டம் நிறைவடைந்திருக்கும். பிஆர்எஸ் கட்சிக்கு ஒரே குறிக்கோள் கே.சி.ஆர் (எனது தந்தை) பண்ணை வீட்டில் இருக்க வேண்டும். கே.டி.ராமாராவ் (எனது அண்ணன்) முதல்வராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Telangana Rashtra Sena ,Chandrasekhara Rao ,KCR ,Tirumala ,Former ,Chief Minister ,K. Chandrasekhara Rao ,Kavitha ,Telangana ,Rama… ,
× RELATED எந்த கட்சியில் சேர வேண்டும் என்பது...