×

லஞ்ச வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10,000 நோட்டுகளை எலி தின்றுவிட்டது: போலீஸ் தகவலால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள்

புதுடெல்லி: லஞ்ச வழக்கில் கைப்பற்றப்பட்ட பண நோட்டுகளை எலிகள் தின்று விட்டன என்ற தகவலை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். பீகாரில் கடந்த 2014ல் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரியாக பணியாற்றியவர் அருணா குமாரி. அப்போது ரூ.10,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. விசாரணை நீதிமன்றம் அவரை விடுவித்தது. இதை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றம் அருணா குமாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அருணா குமாரி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா,கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

குற்றவாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லஞ்ச பணம் போலீஸ் நிலையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.அந்த அறை சரியாக பராமரிக்கப்படாததால் 10,000 ரூபாய் நோட்டுகளை எலிகள் தின்று விட்டன என்று பாட்னா உயர்நீதிமன்றம் பதிவு செய்துள்ள அறிக்கையை பற்றி குறிப்பிட்ட நீதிபதிகள், பண நோட்டுகள் எலிகளால் அழிக்கப்பட்டதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இது மாநிலத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கேள்விகளையும் எழுப்புகிறது. பணத்தாள்கள் சேதமடைந்ததற்கு அளிக்கப்பட்ட விளக்கம் நம்பும்படி இல்லை என கூறிய நீதிபதிகள் இது குறித்து அடுத்த விசாரணையில் விசாரிக்கப்படும் என்றனர். மேலும் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரியின் 4 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ததோடு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Tags : New Delhi ,Supreme Court ,Aruna Kumari ,Bihar ,
× RELATED எந்த கட்சியில் சேர வேண்டும் என்பது...