- ஆம் ஆத்மி
- பாஜக
- ஜலந்தர்
- ஹர்பஜன் சிங்
- அசோக் மிட்டல்
- ராஜேந்திர குப்தா
- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்…
ஜலந்தர்: ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்த எம்பிக்கள் ஹர்பஜன்சிங், அசோக் மிட்டல், ராஜேந்திரகுப்தா வீடுகளுக்கு முன்பு ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். வீட்டு சுவர்களில் துரோகி என எழுதியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சதா தலைமையில் 7 எம்பிக்கள் ஆம்ஆத்மியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகவ் சதா, சந்தீப் பதக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம்ஜித் சிங் சாஹ்னி, சுவாதி மாலிவால், அசோக் மிட்டல் ஆகியோர் முறைப்படி பாஜவில் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 7 எம்பிக்களுக்கு எதிராக ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் இல்லத்தின் வெளிச் சுவர்களிலும், பிரதான வாயிலிலும் போராட்டக்காரர்கள் ‘கத்தார்’ (துரோகி) என்ற சொல்லை எழுதினர். மேலும் அவரது வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதே போல் லூதியானாவில் உள்ள எம்பி அசோக் மிட்டல் வீட்டிற்கு வெளியேயும் துரோகி என்ற எழுத்தை எழுதி ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மேலும் அசோக் மிட்டலுக்குச் சொந்தமான லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் பக்வாரா வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியேயும், போராட்டக்காரர்கள் துரோகி என்ற வார்த்தையை கருப்பு ஸ்ப்ரே பெயிண்ட் மூலம் எழுதினர். மேலும், எல்.பி.யு வளாகத்திற்கு வெளியே இருந்த மிட்டலின் சுவரொட்டியைப் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதோடு, பஞ்சாப் மக்களுக்குத் துரோகம் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டி, அவருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அதே போல் மற்ற அனைத்து எம்பிக்களுக்கும் எதிராகவும் ஆம்ஆத்மி தொண்டர்கள் பஞ்சாப் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.
இன்னொரு எம்பி ராஜேந்திர குப்தாவின் இல்லத்திற்கு வெளியே நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆம் ஆத்மி பஞ்சாப் இளைஞர் அணியின் பொறுப்புத் தலைவர் பர்மிந்தர் கோல்டி, ஆம் ஆத்மியின் ஆட்சியைக் கண்டு பாஜ நிலைதடுமாறிப் போயுள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில் ராகவ் சதா உள்ளிட்ட 7 எம்பிக்களும் பயத்தின் காரணமாகவே ஆம்ஆத்மியில் இருந்து வெளியேறினர் என்று தெரிவித்துள்ளார்.இதற்கு பதில் அளித்துள்ள ராகவ் சதா, நாங்கள் வெளியேறியது பயத்தினால் அல்ல, மாறாக ஏமாற்றமடைந்ததாலேயே என்று கூறினார்.
* ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பா.ஜவில் இணைவது அரசியலமைப்புக்கு எதிரானது: கபில் சிபல்
சு யேச்சை எம்.பி கபில் சிபல் கூறியதாவது: ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பா.ஜ.வுடன் இணைந்திருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. ஏனெனில், ஒரு அரசியல் கட்சி முழுமையாக இணைந்தால் மட்டுமே, அதன் உறுப்பினர்கள் இணைவதற்குச் சட்டம் அனுமதிக்கிறது. யாரும் தாங்களாகவே தனித்துச் சென்று ஒரு கட்சியில் இணைந்துவிட முடியாது. அரசியலமைப்பின்படி, முதலில் அரசியல் கட்சியானது தனது அமைப்பு ரீதியான அளவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்; ஒரு அரசியல் கட்சியாகத் தாங்கள் பா.ஜ.வுடன் இணைய விரும்புவதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; அதன் பிறகு மட்டுமே இணைப்புச் செயல்முறை நடைபெற முடியும்.
முதலில் அரசியல் கட்சிதான் இணைய வேண்டும், அதன் பிறகுதான் எம்.பி.க்கள் இணைய முடியும்; இதற்கு நேர்மாறாகச் செயல்பட முடியாது. இச்செயல் அரசியலமைப்பின் 10வது அட்டவணைக்கு எதிரானது. நீங்கள் (பிரதமர்) டிரம்பிடம் எவ்வாறு சரணடைகிறீர்களோ, அதேபோல்தான் ஆம் ஆத்மி உறுப்பினர்களும் உங்களிடம் சரணடைந்துள்ளனர். இரண்டுமே ஒன்றுதான். வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்த நாட்டை ‘நரகக் குழி’ என்று வர்ணிக்கும் துணிச்சலைப் பெறுகிறார்; ஆனால் இந்தியாவின் பிரதமரோ அதற்குப் பதிலளிக்காமல் இருக்கிறார்.
இந்த நாட்டின் வரலாறு எழுதப்படும்போது, இக்காலகட்டமே மிக இருண்ட நாட்களாகப் பதிவு செய்யப்படும். இந்த இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில், நாம் ஏதேனும் ஒரு வெளிச்சத்தைக் காண்போம் என்று நான் நம்புகிறேன். பாஜகவின் ஒட்டுமொத்த அரசியலும் ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. சபாநாயகர்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் செயல்படுகின்றனர்; நீதிமன்றங்களோ பல ஆண்டுகளாகத் தீர்ப்பளிக்காமல் இழுத்தடிக்கின்றன. ஆனால், நாங்கள் ஏதேனும் கருத்துகளைத் தெரிவித்தால் மட்டும் எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்றார்.
* சட்டவிரோதமானது: சஞ்சய்சிங் எம்பி கருத்து
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கூறியதாவது: கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-defection law), ராஜ்ய சபை மற்றும் மக்களவையில் எந்த விதமான பிளவோ அல்லது பிரிவோ ஏற்படக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட, அத்தகைய பிளவுகளுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் ஏதும் இல்லை. இருப்பினும் பா.ஜவில் இணைந்துள்ள அந்த 7 எம்.பி-க்களின் செயல் முற்றிலும் அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் சட்டவிரோதமானது. எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
