நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் 20 ஆயிரம் நெல் மூட்டைகளை நடுரோட்டில் குவித்து வைத்து விவசாயிகள் இரவும் பகலும் காவல் காத்து வருகின்றனர். ‘விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லையே’ என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் மானூர், கானார்பட்டி, மாவடி, கரம்பை, மதவக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்ததால் நெல் விளைச்சலும் அமோகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக மானூர் பகுதிகளில் நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக காட்டி வருகின்றனர். தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை மானூரில் செயல்படும் ஒன்றிய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு நெல் கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. வெளியூர்களுக்கு அனுப்ப போதிய லாரிகளை வரவழைக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தாங்கள் கொண்டு சென்ற நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வேறு வழியின்றி கொள்முதல் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சுமார் ஒன்றரை கி.மீ. தூரத்திற்கு சுமார் 20 ஆயிரம் நெல் மூட்டைகளை மலை போல் அடுக்கி வைத்துள்ளனர். சிலருக்கு சாக்கு பைகள் கூட கிடைக்காததால் நெல்லை அப்படியே சாலையில் குவியலாக கொட்டி வைத்துள்ளனர்.
ஆறு மாத காலம் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்த விவசாயிகளுக்கு நெல்லை விற்ற பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. கொட்டிய பனியிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் வீட்டிற்கு செல்லாமல் வீதியிலேயே முடங்கி நெல் மூட்டைகளை அவர்கள் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை அந்த பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். இது குறித்து மானூர் பகுதியை சேர்ந்த விவசாயி மகேஷ் (45) கூறுகையில் ‘‘40 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளை சாலையில் வைத்து இரவு பகலாக பாதுகாத்து வருகிறோம். வாரத்திற்கு 5,000 சாக்கு பைகளை மட்டுமே கொடுத்து நெல்லை கொள்முதல் செய்கிறார்கள்.
ஆனால் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்து விற்பனைக்கு அனுப்ப அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி அனுப்பும் வரை விவசாயிகள்தான் நெல்லுக்கு பொறுப்பு என அதிகாரிகள் கூறுகின்றனர். போதிய வசதிகள் இல்லாததால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம்’’ என்றார். கண்ணீருடன் சாலையில் காத்திருக்கும் விவசாயிகளின் துயரத்தை துடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் எனவும், போதிய சாக்கு பைகளை வழங்கி விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
