×

75,064 மையங்களில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாததால் தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 மையங்களில் நடந்த வாக்குப்பதிவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாததால், தமிழ்நாட்டில் எங்கும் மறுவாக்குப்பதிவு இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில்கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவின்போது சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் தொகுதியில் வாக்குச்சாவடி ஒன்றில் தலைமை காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்த இடங்களில் வாக்குப்பதிவு முறையாக நடைபெற்றதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக நேற்று ஆய்வு செய்தது. சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்களுக்கு இடையே ‘பூத் ரிக்கிங்’ எனப்படும் வாக்குப்பதிவு முறைகேடு தொடர்பாக மோதல் வெடித்தது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பதிவான வீடியோ ஆதாரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நீண்ட நேரம் தடையானது.

பின்னர் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலின்போது, ​​சென்னை, வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் பழுதடைந்த காகித மாதிரி எந்திரம் ஒன்று இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதால், அங்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், 2026ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதுபோன்று பிரச்னைகள் எங்கும் நடைபெறாமல் அமைதியாக நடைபெற்றது.இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்படவில்லை. எனவே தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோல மேற்கு வங்க தேர்தலிலும் முதற்கட்ட வாக்குப்பதிவின் 44,376 வாக்குச்சாவடிகள் எதிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழ்நாட்டில் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 75064 வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து வேட்பாளர்களுக்கும் 17ஏ விண்ணப்பம் வழங்கப்பட்டு, உரிய ஆய்வுக்கு பிறகு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால், தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எந்த வாக்குச்சாவடி மையத்திலும் பரிந்துரைக்கப்படவில்லை.

17ஏ விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டபோது, அது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவங்கள் அனைத்தும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 62 ஸ்டிராங் ரூம்கள் இரண்டு பூட்டுகள் முறையில் பூட்டப்பட்டுள்ளது. 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டிராங் ரூம் கதவுகள், ஜன்னல்கள் சீல் வைக்கப்பட்டு, சிசிடிவி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் தினமும் இரண்டு முறையும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒரு நாளைக்கு ஒருமுறையும் பார்வையிடுவார்கள். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஸ்டிராங் ரூமை கண்காணிக்க முகாம்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,
× RELATED தின்பண்டங்கள், சோப்பு, சிப்ஸ் உள்ளிட்ட...