பெரம்பலூர், ஏப். 23: காவல் துறையினர் வெளிப்படையான தேர்தலை நடத்த உறுதுணையாக இருக்கவேண்டும் என்று சட்டமன்ற தேர்தல் பணிக்கு புறப்பட்டுச் சென்ற காவலர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் அறிவுறுத்தினார். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட எஸ்பி பிரபாகர் தலைமையில், மாவட்ட காவல்துறையினர் அனைவரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்குப் பணி அமர்த்தப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த பணியமர்த்தல் நடவடிக்கையின் போது, தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுதல், வாக்குச்சாவடிகளில் அமைதியான மற்றும் சீரிய வாக்குப்பதிவை உறுதி செய்தல், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்குதல் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து காவல் துறையினருக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தங்களது கடமைகளை முழு பொறுப்புடன் மேற்கொண்டு, சீரிய மற்றும் வெளிப்படையான தேர்தலை நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி பிரபாகர் அறிவுரைகள் வழங்கினார். இதன் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான தேர்தல் நடைபெற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
