பெரம்பலூர், ஏப். 19: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் தனது தபால் வாக்கைப் பதிவு செய்தார். தமிழகத்தில் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் நோக்கில், பெரம்பலூர் மாவட்டத்தின் எஸ்பி பிரபாகர் நேற்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் முதல் நபராக தனது தபால் வாக்கை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், வாக்குச்சாவடி பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்கு வசதியை பயன்படுத்தி மாவட்டம் முழுவதும் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்த நடவடிக்கை, தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்துவதுடன், ஜனநாயகத்தின் மீதான காவல்துறையினரின் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. மேலும், 100 சதவீத வாக்களிப்பை இலக்காகக் கொண்டு, பொது மக்களும் தங்களது வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட எஸ்பி பிரபாகர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
