×

உஜ்ஜயினியின் விவேகி ரோகிலன்

காளிதாசரால் புகழ்பெற்ற உஜ்ஜயினி மாநகரம். அரசர் ஒருவர் அந்நாட்டை நல்ல முறையில் அரசாட்சி செய்து வந்தார். அந்தக் காலத்தில் ஊர் எல்லையில் இருந்த வனப் பகுதியில் நாடோடி மக்கள் ஏராளமாக தங்கி இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கூத்தாடுவதில் திறமைசாலிகள். அவர்களில் ரோகிலன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அழகு, அறிவு, அமைதி, பொறுமை என அனைத்திலும் சிறந்தவனாக இருந்தான். பள்ளிப் படிப்பு இல்லையே தவிர, பார்ப் பதையெல்லாம் மனதில் பதித்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படுவதில் திறமைசாலி.

ஒருநாள் ரோகிலன் தன் தந்தையுடன் நகரத்திற்குச் சென்றான். நகர வீதிகள் – அரண்மனை என அனைத்தையும் பார்த்தான் பிற்பாடு தந்தையுடன் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பினான்.இரண்டு நாட்கள் கடந்தன. அரசர் ஒரு சில வீரர்களுடன் காட்டுப்பக்கம் வந்தார். அந்தக் காட்டில்தான் ரோகிலன் தங்கி இருந்தான். அவனைச் சார்ந்தவர்களும் தங்கி இருந்தார்கள்.

அரசர் குதிரை மீது அமர்ந்து அந்தக் காட்டுப்பகுதியில் வந்த போது, திடீரென்று ரோகிலன் குதிரையை மறித்தான்; ‘‘மெள்ளச் செல்லுங்கள்! அதிகமாக ஓசை எழுப்பாதீர்கள்! அருகில் அரண்மனை இருக்கிறது’’ என்றான்.அரசருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை; திகைத்தார்கள். அரசர் அமைதியாக கேட்டார்; ‘‘தம்பி! யார் நீ? அருகில் அரண்மனை இருக்கிறது என்றாயே! அது யாருடைய அரண்மனை?’’ என்று கேட்டார்.

‘‘இந்தக் காட்டுப்பகுதியில் இருப்பவன் நான். என் பெயர் ரோகிலன். அருகிலிருக்கும் அரண்மனை உஜ்ஜயினி மன்னருடையது’’ என்றான். அதைக் கேட்ட மன்னர், ‘‘ஓ! அப்படியா? சரி நான் அந்த அரண்மனையைப் பார்க்கலாமா?’’ எனக் கேட்டார். ‘‘வாருங்கள்! நானே காட்டுகிறேன்’’ என்றான் ரோகிலன். குதிரையிலிருந்து கீழே இறங்கிய அரசர் ரோகிலனைப் பின் தொடர்ந்தார். அரசருடன் வந்தவர்களும் பின் தொடர்ந்தார்கள். அவர்களை எல்லாம் அழைத்துப் போன ரோகிலன் தன் இடத்திற்குப் போனதும், ‘‘இதோ பாருங்கள்! உஜ்ஜயினி மன்னரின் அரண்மனை’’ என்று காண்பித்தான்.

அரசரும் வீரர்களும் பார்த்தார்கள். உஜ்ஜயினி அரண்மனை அதனுடைய வீதிகள்-மாடமாளிகைகள் என அனைத்தும் அங்கு பிரதி எடுக்கப்பட்டதைப்போல மண்ணால் செய்யப்பட்டிருந்தன. அதைக் கண்டு அரசரும் கூட வந்தவர்களும் ஆச்சரியப்பட்டார்கள். அரசர் கேட்டார்; ‘‘தம்பி! நேருக்குநேராகப் பார்ப்பதைப்போல இவ்வளவு தத்ரூபமாக செய்திருக்கிறாயே! நீ அந்த உஜ்ஜயினி நகரத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறாய்? அங்கேயே தங்கி இருந்தாயா?’’ என்றெல்லாம் கேட்டார்.

ரோகிலன் அமைதியாகப் பதில் சொன்னான்; ‘‘ஐயா! இரண்டு நாட்களுக்கு முன்னால் நானும் என் தந்தையும் நகரத்திற்குப் போய்ச் சுற்றிப் பார்த்தோம். அவ்வளவுதான்! ஒரே ஒருமுறை தான் பார்த்தேன். மற்றபடி நான் அங்கு தங்கியது இல்லை. வந்தவுடன் பார்த்தவைகளை அப்படியே செய்யலாமே என்று மண்ணால் இவைகளை வடிவமைத்தேன் அவ்வளவுதான்’’ என்றான். மன்னரின் வியப்பு அதிகமானது.

அமைதியாக அங்கிருந்து விலகினார். மறுநாள் மன்னரிடமிருந்து ஒரு தகவல் ரோகிலனுக்கு அனுப்பப்பட்டது. தகவலைக்கொண்டு வந்த வீரர் ரோகிலனிட மும் அவனைச் சார்ந்தவர்களிடமும் தகவல்களை சொன்னார்; ‘‘இன்னும் மூன்று நாட்களில் இங்கே நீங்கள் தங்கி இருக்கக் கூடிய இந்தப் பெரும் பாறையை மேற்கூறையாக அமைத்து, கீழே ஓர் அரசவை அமைப்பு இருக்க வேண்டும். அதில் ஒரு சிம்மாசனமும் இருக்க வேண்டும். அதில் மன்னர் வந்து உட்காருவார். இதைச்செய்து முடிக்காவிட்டால் உங்கள் அனைவருக்கும் சாட்டை அடி கிடைக்கும். இந்தப் பகுதியை விட்டு விரட்டப்படுவீர்கள்’’ என்று சொல்லித் திரும்பினார்.

அதைக்கேட்டு அனைவரும் பயந்தார்கள்; ‘‘என்ன நடந்ததோ தெரியவில்லை. அரசர் இவ்வாறு உத்தரவிட்டுவிட்டார். இதைச் செயல்படுத்த முடியுமா என்ன? கண்டிப்பாகச் சாட்டையால் அடித்து நம்மை இந்தப் பகுதியை விட்டே விரட்டி விடுவார்கள்’’ என்று புலம்பத் தொடங்கினார்கள்.

அவர்களுக்கெல்லாம் ரோகிலன் ஆறுதல் சொல்லி, ‘‘ஏன் கவலைப்படுகிறீர்கள்? இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்ற னவே! மன்னர் அனுப்பிய உத்தரவைத் தாராளமாகச் செயல் படுத்தலாம். இந்தப் பாறையின் கீழ் அரசவை இருக்க வேண்டும். அதில் சிம்மாசனத்தில் வந்து அரசர் அமருவார். இதுதானே தகவல்? கவலையே வேண்டாம். நான் செய்கிறேன்’’ என்றான்.

சொன்னதைப் போலவே கூரை போலிருந்த அந்தப்பெரும் பாறையை அப்படியே மேற்கூறையாக விட்டு, அதன் கீழே இருந்த தரைப் பகுதியில், ஆங்காங்கே செப்பனிட்டு, அதன் மேலாகப் பலகைகளை இட்டு ஆசனங்களையும் இட்டு, ஒரு சிம்மாசனத்தையும் அமைத்து அரசவை போன்ற ஓர் அமைப்பை உருவாக்கி விட்டான் ரோகிலன்; அரசருக்குத் தகவலையும் அனுப்பினான்.

அரசர் வந்தார். அவருடன் ஒரு நாயும் அரண்மனை வீரர்கள் சிலரும் வந்திருந்தார்கள். அரசர் பார்த்தார். தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. அரசவையின் அமைப்பு அப்படியே அங்கு இடம் பெற்றிருந்தது. மனதார ரோகிலனைப் பாராட்டிய அவர் ஏராளமான வெகுமதிகளை அளித்தார். அதன்பின் தன்னுடன் இருந்த நாயைச் சுட்டிக்காட்டிய அரசர், ‘‘சிறுவா! இந்த நாய் இங்கே, தனக்குத்தானே சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். வேறு நாயையோ விலங்குகளையோ கொண்டு வரக்கூடாது. செய் பார்க்கலாம்!’’ என்றார்.

‘‘தாராளமாகச் செய்யலாம் மன்னா! தாங்கள் சற்று விலகி நில்லுங்கள்!’’ என்று சொன்ன ரோகிலன், நாயின் எதிரில் ஒரு பெரிய நிலை கண்ணாடியை கொண்டுவந்து வைத்தான். அந்த நிலை கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைக் கண்ட நாய் வேறு ஒருநாய் இருக்கிறது போலிருக்கிறது என்று குரைத்துக் கண்ணாடி உடன் மோதிச் சண்டை போடத் தொடங்கியது.‘‘சபாஷ்! சபாஷ்! சிறுவா! நல்ல முறையில் செயல்படுத்தி விட்டாய்’’ என்று மறுபடியும் வெகுமதிகள் அள்ளிக் கொடுத்தார்.

ரோகிலனின் திறமை அங்கிருந்த அனைவரையும் வியக்க வைத்தது. ஏதோ சற்று யோசிப்பதுபோல யோசித்த அரசர், ‘‘சிறுவா! ஒரே ஒரு சோதனை இருக்கிறது இன்னும். அன்று நான் வந்தபோது ஒரு மணல்மேட்டின் அருகே என்னை வழிமறித்தாய் அல்லவா? அந்த மணல்மேட்டில் இருந்து மண்ணை எடுத்து, அந்த மண்ணால் ஆன கயிறு ஒன்று நீ தயாரித்துக் கொடுக்க வேண்டும். செய்!’’ என்றார்.

ரோகிலன் யோசிக்கவே இல்லை; ‘‘மன்னா! இதைச் சுலபமாக செய்யலாமே. தாங்கள் அரண்மனை போனதும், எப்படிப்பட்ட கயிறு வேண்டும் என்று ஒரு மாதிரிக் கயிறு அனுப்புங்கள்! அதைப்பார்த்து அப்படியே செய்து தந்து விடுகின்றேன்’’ என்றான். ரோகிலனின் சமயோசித அறிவைப் பாராட்டிய அரசர், ‘‘சிறுவா! நல்ல அறிவு கூர்மை உனக்கு. சரி! நீ அரண்மனையில் வந்து என்னைப்பார்க்க வேண்டும். அது இரவாகவும் இருக்கக் கூடாது; பகலாகவும் இருக்கக் கூடாது; பிரதமை முதலான எந்தத் திதிகளும் இருக்கக்கூடாது.

வளர்பிறை-தேய்பிறை என்றும் இருக்கக்கூடாது. பகல்-இரவு என்றும் இருக்கக்கூடாது. அப்படிப் பட்ட நேரத்தில் நீ வரவேண்டும். வரும்போது எதையும் நீ கொண்டு வரக்கூடாது வெகுமதியாக. அதே சமயம் வெறும் கையுடனும் வரக்கூடாது. செய்ய முடியுமா உன்னால்?’’ எனக் கேட்டார்.‘‘முயற்சி செய்கிறேன் மன்னா!’’ என்றான் ரோகிலன். மன்னர் திரும்பினார். நாட்கள் கடந்தன. மன்னர் சொன்னதை மனதிற்குள் ஒரு முறை ஓட்டிப் பார்த்தான் ரோகிலன்; ‘‘பகல் இரவு எனும் நேரங்களில் வரக்கூடாது. அந்தி சாயும் நேரமாகத் தேர்ந்தெடுத்தான்.

அது இரவும் அல்லாமல் பகலும் அல்லாமல் இருக்கும் அல்லவா அதனால்? வளர்பிறை தேய்பிறை ஆகிய திதிகளில் வரக்கூடாது என்பது அடுத்த நிபந்தனை. அதையும் சமாளித்தான் ரோகிலன். பஞ்சாங்கங்களில் அமாவாசை என்று போட்டு, கூடவே பிரதமையும் போட்டிருக்கும். அப்படிப்பட்ட நாள் வளர் பிறையிலும் வராது, தேய்பிறையிலும் வராது; அடங்காது. திதிகளிலும் அடங்காது. இப்படிப்பட்ட நாளாகத் தேர்ந்தெடுத்தான். அடுத்தது வெயிலில் வரக்கூடாது, நிழலிலும் வரக்கூடாது. இவன் அந்தி சாய்ந்து ஊருக்குள் நுழையும்போது, வெயில் ஏது? நிழல் ஏது? அதையும் இவ்வாறு செயல்படுத்திச் சமாளித்தான்.

அரசவையில் நுழைந்தான். அரசருக்கு வணக்கம் செலுத்தி அவர் முன்னால் ஒரு சிறு மண் உருண்டையை வைத்தான்.அதைப் பார்த்த அரசரின் எண்ணம் பல வகைகளிலும் ஓடத் தொடங்கியது; ‘‘உலகம் என்பது ஒரு சாதாரண மண் உருண்டை. அதிலும் நாம் இருக்கக்கூடிய பகுதி மிகவும் சிறிய பகுதி அதிலும் நாம் இருக்கக்கூடிய இந்த இடம், சிறியதிலும் சிறியது. இருக்கக்கூடிய நாமோ துகளைவிடத்துகள்.

இப்படிப்பட்ட நிலையில் அடுத்தவர்களை ஆராய்ச்சி செய்துகொண்டு பொழுதைக் கழிக்கிறாயே மன்னா! என்று எனக்கு அறிவுரை சொல்வது போல் இருக்கிறது. நான் போட்ட நிபந்தனைகள் அனைத்தையும் அழகாகச் சமாளித்து இங்கே வந்து நிற்கும் இந்த ரோகிலன் தலைசிறந்த அறிவாளி. எப்படிப்பட்ட நிலையிலும் எதையும் நிர்வாகம் செய்யக்கூடிய திறமை பெற்றவன். இவனுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டியது தான்’’ என்று தீர்மானித்தார்.

தீர்மானம் உடனே செயலானது. சிம்மாசனத்தை விட்டு இறங்கிய அரசர் ரோகிலனைக் கட்டித் தழுவினார். அங்கு அரசவையில் அனைவர் முன்பும் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தானே விவரித்தார். அனைவரும் மெய் மறந்தார்கள்.பாராட்டினார்கள்; அப்போது மன்னர், ‘‘இவ்வாறு நான் சொன்னவைகளை எல்லாம் மிகவும் திறமையாகச் சமாளித்துச் செயல்படுத்திய இந்த ரோகிலனை எனக்கு அமைச்சராக நியமிக்கிறேன்’’ என்றார்.

அனைவரும் பாராட்டி வாழ்த்தினார்கள். ரோகிலன் மன்னரை வணங்கினான். ரோகிலனைச் சார்ந்தவர்களும் மன்னரை வணங்கித் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள். அறிவுக் கூர்மை, தெளிவு, பொறுமை எனும் அனைத்தும் நிறைந்த ரோகிலனின் வாழ்வு நமக்கு எல்லாம் ஒரு பாடம்.

V.R.சுந்தரி

Tags : Vivegi Rogilan ,Ujjain ,Kalidasar ,Rogilan ,
× RELATED திணித்தல் – இறைநீதி அல்ல