×

பக்தர்களை காக்கும் கள்ளக்குறிச்சி அனுமன்

இது 50வது தொகுப்பு! ஆச்சரியமாகவும், பிரம்மிப்பாகவும் இருக்கிறது. மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை நம்மால் தேடிச் சென்று, கண்டுபிடித்து ஆதாரத்துடன் எழுத முடியுமா? என்று நினைத்த என்னுள், அனுமன் பக்க பலமாக இருந்து, வழிநடத்தினார் என்றுதான் சொல்லவேண்டும். இந்த தொகுப்பையும் சேர்த்து மொத்தம் 50 அனுமனின் தொகுப்பினை மகான் ஸ்ரீ வியாசராஜருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

கருமி வியாபாரி
முதலில், மகான் ஸ்ரீ வியாசராஜரின் சுவாரஸ்ய சம்பவத்தோடு இந்த தொகுப்பை தொடங்குவோம். மகான் ஸ்ரீ வியாசராஜரின் காலம் 1447-ஆம் ஆண்டு முதல் 1548-ஆம் ஆண்டு வரை அதாவது 101 ஆண்டுகள் வாழ்ந்த மகான் ஆவார். “சதமானம் பவதி’’ என்று வேதம் வாழ்த்தி கூறுகிறது. அதற்கு ஏற்றால் போல், 100 ஆண்டுகள் பூரணமாக வாழ்ந்த மகான்!
முன்னொரு காலத்தில், ஸ்ரீனிவாச நாயக்கர் என்பவர் வைர – வைடூரிய வியாபாரம் செய்துவந்தார். வைர வியாபாரம் செய்து வந்தாலும், அடிப்படையில் மிகவும் கருமி. தன் மனைவி – பிள்ளைகளுக்குகூட ஒரு நாளைக்கு குறைந்த அளவில்தான் அன்னம் செய்து உணவருந்த வேண்டும் என்று கட்டளை இடுபவன். அத்தகைய மிகவும் கருமி. அந்த சமயத்தில் வியாசராஜர், தேச சஞ்சாரமாக நாயக்கரின் ஊருக்கு வருகிறார். எங்கு தன்னிடம் வியாசராஜர் ஏதேனும் உதவிகளை கேட்டு விடுவாரோ… என்கின்ற தீய எண்ணத்தில், அவரை கண்டும் காணாதவாறு நாயக்கர் செல்கிறார்.

ஏழை அந்தணன்
இப்படியிருக்க, வயதான அந்தணர் ஒருவர், ஸ்ரீனிவாச நாயக்கரின் கடைக்கு வருகிறார்.
“யாருயா.. அது?’’ என்றார், (நாயக்கர்)
“நான் ஏழை அந்தணன். என் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. ஒரு நூறு வராகன் தேவைப்படுகிறது. கொஞ்சம் உதவி செய்தால் நன்றாக இருக்கும்’’ என்றார், (அந்தணர்)
“ஆமா… இப்படியே வறவன் போறவனுக்கு எல்லாம் காசு கொடுத்து உதவி செய்தால், நான் முக்காடு போட்டு போக வேண்டியதுதான். போயா…’’ என்று கோபத்தில் திட்டுகிறான். வருத்தத்தோடு நேராக ஸ்ரீனிவாச நாயக்கரின் வீட்டிற்கு செல்கிறார். நாயக்கரின் கிழித்த கோட்டை தாண்டமாட்டார், அவரின் பதிவிரதையான சரஸ்வதிபாய். இப்படி இருக்க..
“அம்மா.. அம்மா..’’ என்று நாயக்கரின் வீட்டின் முன் அந்த அந்தணன், கூவினான். இவளோ.. யாரோ பசியால் கூவுகிறார்கள் என்று நினைத்து, இரண்டு ஆழாக்கு அரிசியை எடுத்துக் கொண்டு செல்ல…
“தாயி.. இதெல்லாம் வேண்டாம். என் பெண்ணிற்கு திருமணம் வைத்துள்ளேன். அதற்கு நூறு வராகன் தேவைப்படுகிறது. கொடுத்து உதவி செய்தால் உன் ஏழேழு பிறவிகள் தழைத்தோங்கும்’’ என்றார், (அந்தணர்)
“அப்படியா.. வீட்டில் பணம் ஏதுமில்லை. அதுபோக.. என் கணவனின் அனுமதி இல்லாமல் நான் எதுவும் செய்யலாகாது’’ என்றார், சரஸ்வதிபாய்.
“அது சரி.. எனக்கு இப்போதே நூறு வராகன் தேவைப்படுகிறது. திருமணம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீங்கள் பணம் கொடுத்து உதவவில்லை என்றால், திருமணமே நின்றுவிடும். திருமணம் நின்ற பாவத்திற்கு ஆளாவீர்கள். பெண்ணின் திருமணத்தை தயவு செய்து நடத்திவையுங்கள்’’ என்று கெஞ்சிய அந்தணரின் முகத்தை பார்க்க பாவமாக இருந்தது.
“என்னிடம் பணம் இல்லையே..’’ என்றார், சரஸ்வதிபாய்.
“பணம் இல்லை என்றால் என்ன.. இதோ.. நீங்கள் அணிந்திருக்கும் மூக்குத்தியை கழற்றி தாருங்கள். அதை வைத்து திருமணத்தை நடத்திக்கொள்கிறேன்’’ என மூளை சலவை செய்யத் தொடங்கினார், அந்தணர். தர்ம சங்கடத்தில் இருந்த சரஸ்வதிபாய், ஒரு கட்டத்தில் தனது மூக்குத்தியினை கழற்றி, அந்தணரிடம் கொடுக்கிறாள்.
“பல்லாண்டு வாழ்க’’ என்று நாயக்கரின் மனைவியை வாழ்த்திய அந்தணர், நேராக.. ஸ்ரீனிவாச நாயக்கரின் கடைக்கு செல்கிறான்.

ஏமாற்றிய ஸ்ரீனிவாச நாயக்கர்
“ஹேய்.. அங்க பாரு. அன்று நம்மிடம் யாசகம் கேட்டு ஒரு அந்தணன் வந்தானே.. அவன்தான் இன்றும் யாசகம் தேடி நம்மிடையே வருகிறான். அவனை விரட்டி அடி’’ என்று தன் உதவியாளரிடம், ஸ்ரீனிவாச நாயக்கர் கூறிய மறுநொடியில்…
“நாயக்கரே… இந்த துணிமுடிச்சில் தங்க மூக்குத்தி உள்ளது. அதை எடுத்துக் கொண்டு எனக்கு பணத்தை கொடும்’’ என்று அதிகார தோரணையில் அந்தணர்கூற,
“அப்படியே ஆகட்டும் ஸ்வாமி.. இதோ இங்கே வந்து அமருங்கள்’’ என்று பணிவோடு நாயக்கர் கூறினான்.
“டேய்.. இந்த மூக்குத்தியை நான் எங்கையோ பார்த்ததை போல் இருக்கிறது. சரி அதைவிடு.. இந்த மூக்குத்தி எப்படியும் 500 வராகன் மேல் பெரும். அவனுக்கு நூறு வராகன் இருந்தால் போதும் அல்லவா.. அதனையே கொடுத்து அனுப்புவோம்’’ என்று தன் உதவியாளரிடம் முணுமுணுத்தான், ஸ்ரீனிவாச நாயக்கர்.
“ஸ்வாமி.. இது ஒரு 80 வராகன்தான் தேறும். ஆனால், உங்கள் மகளின் திருமணத்திற்கு 100 வராகன் வேண்டும் அல்லவா..? பரவாயில்லை 20 வராகனையும் சேர்த்து மொத்தம் நூறு வராகனையும் தருகிறேன்’’ என்றார், நாயக்கர்.
“ஹம்..ம்.. சீக்கிரம் ஆகட்டும்’’ என்றார், அந்தணர்.
“நூறு வராகனை தந்துள்ளோம். உங்கள் மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்திடுங்கள்’’ என்று அந்தணனிடம் கூறுகிறார், நாயக்கர். அந்தணரும் நூறு வராகனை பெற்றுக் கொண்டு செல்கிறார். அந்தணனை ஏமாற்றிவிட்டோம் என்கின்ற மகிழ்ச்சியில், மூக்குத்தியினை எடுத்து தனது பெட்டியில் வைத்து, நன்கு பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்கிறார் ஸ்ரீனிவாச நாயக்கர்.

திடீர் என்று தோன்றிய மூக்குத்தி
எங்கு கணவன் மூக்குத்தி பற்றி கேட்டுவிடுவாரோ.. என்கின்ற அச்சத்தில், முகத்தை மறைத்து வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். இருப்பிலும், எப்படியோ மனைவியின் முகம் நாயக்கருக்கு தென்பட…
“உன் முகத்தில் இருக்கும் மூக்குத்தி எங்கே… சரஸ்வதிபாய்?’’ என்றார், நாயக்கர்.
“அது.. அதுவந்து…’’ என்று தயங்கியபடி சரஸ்வதிபாய் நிற்க,
“எனக்கு அப்பவே சந்தேகம் ஏற்பட்டது. ஒரு அந்தணன் உன் மூக்குத்தி போலவே வைத்திருந்தான்’’ என்று நாயக்கர் யோசிப்பதற்குள்,
“இதோ.. உள்ளே கழற்றி வைத்துள்ளேன்’’ என்று பொய்ச் சொல்கிறாள்.
“எங்கே.. கொண்டுவந்து காட்டு’’ என்று அதட்டும் தோரணையில் நாயக்கர்கூற.. பூஜை அறைக்கு ஓடிச் சென்று;
“பாண்டுரங்கா.. பண்டரிநாதா… கணவனின் அனுமதி இல்லாமல் மூக்குத்தியை அந்த அந்தணனுக்கு கொடுத்தது, முதல் குற்றம். இப்போது கணவனிடத்தில் பொய் வேறுகூறிவிட்டோம். இது இரண்டாவது குற்றம். இனி நான் உயிரோடு இருக்க போவதில்லை’’ என்று தன் உயிரை மாய்த்து கொள்ளும் சமயத்தில், அந்தணனிடம் கொடுத்த மூக்குத்தி மீண்டும் பாண்டுரங்கனின் புகைப்படத்தின் முன்பாக விழுந்தது. ஆச்சரியத்துடன் அதனை எடுத்துக் கொண்டு தன் கணவனிடத்தில், நடந்தவை அனைத்தையும் கூறுகிறாள்.
“இருக்க வாய்ப்பில்லையே… அந்த அந்தணன் கொடுத்த மூக்குத்தியினை பத்திரமாக பீரோவில் அல்லவா பூட்டி வைத்தேன்! இங்கு எப்படி வந்தது?’’ என்று சந்தேகத்தோடு கடைக்கு செல்கிறான் ஸ்ரீனிவாச நாயக்கர். அதே சமயத்தில், நாயக்கரின் வீட்டிற்கு அந்தணன் வருகிறான்.

நாயக்கர் புரந்தரதாசராக மாறுதல்
“நீங்கள் என்னிடம் மூக்குத்தியினை பெற்றுச் சென்ற அந்தணர் அல்லவா?’’ என்றார், சரஸ்வதிபாய்.
“ஆம்.. ஆனால் எனது சுயரூபம் வேறு’’ என்று தன் சுயரூபத்தை காட்டுகிறார். அந்தணனாக வந்தது பாண்டுரங்கன் என்பதனை சரஸ்வதிபாய் புரிந்துகொண்டு, கண்ணீர் மல்க இருகைகளை கூப்பி வேண்டுகிறாள்.
“ஸ்ரீனிவாச நாயக்கரின் முப்பிறவியின் கர்மவினை பயனாக, அவன் கருமியாக வாழ நேர்ந்தது. அவன் சிறந்த பக்திமானாக வலம் வரும் காலம் நெருங்கிவிட்டது. அனைத்தையும் விட்டுவிட்டு சரணாகதி அடைந்தால், அவனுக்கு நல்மார்க்கம் கிட்டும்’’ என்றுகூறி மறைந்துவிடுகிறார். அதன் பின்னர், வீட்டிற்கு வந்தான் நாயக்கர்.
“சரஸ்வதி… சரஸ்வதி… பெட்டியில் வைத்திருந்த மூக்குத்தியை காணவில்லையே?’’ என்று வினவினான். பாண்டுரங்கன் வந்ததை பற்றியும், அவர் கூறிய வார்த்தையை பற்றியும் சரஸ்வதிபாய் தன் கணவனிடத்தில் கூறினாள். இதனை கேட்ட ஸ்ரீனிவாச நாயக்கர், அழத்தொடங்கினான்.
“அந்தணன் ரூபத்தில் வந்தது, என் பாண்டுரங்கனா? பாண்டுரங்கனையா ஓடோட விரட்டினேன்’’ என்று தன் தவறை உணர்ந்த ஸ்ரீனிவாச நாயக்கர், தான் சேகரித்து வைத்திருந்த அத்தனை பொருட்களையும் தானம் செய்துவிட்டு, மகான் ஸ்ரீ வியாசராஜரை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். சில நாட்கள் கழித்து வியாசராஜரை அடைகிறார், நாயக்கர்.
“வா.. நாயக்கா… இங்கு உன்னை பாண்டுரங்கன் அனுப்பினானோ?’’ என்று வியாசராஜர் சொன்னதும். நெடுஞ்சாண்கிடையாக வியாசராஜரிடத்தில் விழுந்து வணங்கினார், நாயக்கர்.
“இன்று முதல், “புரந்தரதாசர்’’ என்று அழைக்கப்பெறுவாய்’’ என்று வியாசராஜர், ஸ்ரீனிவாச நாயக்கருக்கு புதியதாக பெயர் சூட்டுகிறார். அதன் பின் எண்ணற்ற பல கன்னட கீர்த்தனைகளை புரந்தரதாசர் இயற்ற தொடங்கினார். இருந்தபோதிலும், ஆண்டவனின் தரிசனம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லையே என்கின்ற வருத்தம் புரந்தரதாசருக்கு இருந்தது. பாண்டுரங்கனை, அடிக்கடி தரிசித்துவிடுவாள் சரஸ்வதிபாய். தன் மனைவிக்கு ஆண்டவன் தரிசனம் கொடுக்கிறான் எனக்கு தரிசனம் கொடுக்கவில்லையே என்கின்ற ஏக்கம் மேலோங்கியது. இத்தகைய தன் வருத்தத்தை குருவான வியாசராஜரிடத்தில் ஒருமுறை சொல்ல… அவர் நகைத்துக்கொண்டே…
“தான் மிக பெரியதாசர், தான் வியாசராஜரின் சீடன், தான் முன்னொரு காலத்தின் கோடீஸ்வரன் என்கின்ற கர்வம் இன்னும் உங்கள் உள்ளத்தில் இருந்துக்கொண்டே இருக்கிறது. அதாவது “தான்’’, “நான்’’ என்கின்ற கர்வம் இருப்பதினால், உங்களுக்கு கடவுளின் தரிசனம் கிட்டவில்லை. அதைவிட்டு விலகினால், கடவுளின் தரிசனம் நிச்சயம் கிட்டும்’’ என்று வியாசராஜர் கூறிய அடுத்த நொடியில், “தான்’’ என்னும் அகங்கத்தைவிடுத்து பாண்டுரங்கனை தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆக, இத்தகைய மாபெரும் சரித்திரம் படைத்த புரந்திரதாஸரை உருவாக்கிய பெருமை வியாசராஜதீர்த்தருக்கு உண்டு!

ஒரே ஒரு துளசி மாலை
அப்பேற்பட்ட வியாசராஜர் அைமத்திட்ட அனுமன் கோயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி ஆறு அருகில் “ஸ்ரீ வீர ஆஞ்சநேயர்’’ என்கிற பெயரில் உள்ளது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் “நந்தவனம்’’ என்னும் பகுதி உள்ளது. பெயருக்கு ஏற்றால் போல், மரங்களும் செடிகளும் நிறைந்து காணப் படுகின்றன. இதன் அருகில் நிசப்தமாக கோமுகி ஆறு ஓடுகிறது. எப்போதுமே வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன், ஆற்றங்கரை ஒட்டியே காணப்படும். இங்கும் அனுமன், கோமுகி ஆறு அருகிலேயே பிரதிஷ்டை ஆகியுள்ளார். சுமார் ஒரு ஐந்து அடியில் மிக பெரிய உருவத்தில் வீர ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். நாம் சென்று தரிசித்த சமயத்தில், பெரிய அலங்காரங்கள் இன்றி, ஒரே ஒரு துளசி மாலையை மட்டுமே அணிந்திருந்தார், அனுமன். இருந்த போதிலும் சாநித்தியம் நிறைந்து காணப்பட்டார். அதனை நம்மால் நன்கு உணர முடிந்தது!
இக்கோயிலில், வியாழன் தோறும் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, நிவேதம் செய்ய பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். அன்றைய தினம் பெரும் அளவில் பக்தர்கள் வருகை தருகின்றார்கள். கள்ளக்குறிச்சி மக்கள் பலரும் இந்த அனுமனை வேண்டுகிறார்கள். குறிப்பாக, திருமணம் மற்றும் குழந்தைக்காக வேண்டிக்கொள்கிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று, நந்தவனத்தில் கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டம் காணப்படும். வீர ஆஞ்சநேயஸ்வாமி கோயில் அருகில், ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயிலும் இருக்கின்றன. மிக பெரிய ஆலமரத்தடியில் அங்காளபரமேஸ்வரி காணப்படுகிறார். இங்கு, கிடந்த கோலத்தில் (சயன கோலம்) அருள்பாலிக்கிறார். அனுமனை தரிசித்த பிறகு, மறக்காமல் அம்மனையும் தரிசிக்க வேண்டும்.

பராமரிப்பு வேண்டும்
மிக பெரிய வருத்தமான செய்தி என்னவென்றால், வீர ஆஞ்சநேயர் கோயில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. வெளிச் சுவர் முழுவதும் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதிலும் குப்பைகள் காணப்படுகின்றன. வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே பூஜைகள் நடைபெறுகிறது . இதனை கள்ளக்குறிச்சி பக்தர்கள் முன்னெடுத்து, கோயிலை பராமரித்து, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனை காக்கவேண்டும் என்பதனை, கோரிக்கையாகவும் முன்வைக்கிறோம்.

குறிப்பு
கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மார்க்கெட் பகுதி இருக்கிறது. இங்கு பக்த அனுமன் அருள்கிறார். இந்த அனுமன் கோயிலையும் மத்வ சம்ரதாயத்தை பின்பற்றியே பூஜைகளை செய்து வருகின்றார்கள். இக்கோயிலையும் தரிசிக்கலாம். (இந்த அனுமன், வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனுமன் கிடையாது)

*கோயில் திறந்திருக்கும் நேரம்: வியாழன் மட்டுமே கோயில் திறந்திருக்கும். (காலை: 6:00 முதல் 7:00 வரை)
*எப்படி செல்வது: கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் நந்தவனம் என்னும் இடம் உள்ளது. இங்குதான் அனுமன் கோயில் கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

Tags : Kallakurichi Hanuman ,Hanuman ,Sri Vyasaraja ,
× RELATED ஏற்றங்களை தரும் ஏகாதசி விரதம்