ஊர் ஊராகப் போய்த் தன்னைப்பற்றிப் பாடும் தியாகராஜரை, தன் முன்னாலேயே நிறுத்திப் பாட வைக்க வேண்டும் என்று பகவான் நினைத்தார் போல் இருக்கிறது. ஒருநாள் இரவு அற்புதமான கனவு ஒன்று கண்டார் தியாகராஜர். கனவு, ‘இன்னும் பத்து நாட்களில் தியாகராஜர் திருமாலின் திருவடிகளை அடைவார்’ என்றது. (இந்த விஷயத்தை ‘கிரிபை நெல’ எனும் கீர்த்தனையில் தியாகராஜரே விவரித்து உள்ளார்) மறுநாள் இரவு, பஜனை முடிந்தது. ஏராளமான அடியார்கள் கூடியிருந்தார்கள். அவ்வளவு பேர் மத்தியிலும் தியாகராஜர் சொல்லத் தொடங்கினார்.
“வரும் பகுளபஞ்சமியன்று இங்கே ஓர் அற்புதம் நடக்கப் போகிறது. எல்லோரும் அன்று வருவீர்களாக!” என்றார்.அவர் சொன்னபடி அனைவரும் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளே, கூடத் தொடங்கி விட்டார்கள். அதாவது சதுர்த்தி அன்று; தியாகராஜர் அந்த நன்னாளில் பரமஹம்ச பிரம்ம நந்தேந்திர ஸ்வாமி என்று யோகியை, தனக்கு சன்னியாசம் தரும்படி வேண்டினார்.அந்த சந்நியாசியோ, ‘‘நீங்கள் ஏற்கனவே ஜீவன் முக்தர். ஆகவே, நீங்கள் சந்நியாசம் பெறத் தேவையில்லை” என்று மறுத்து விட்டார்.
ஆனால் தியாகராஜர் விடவில்லை, மறுபடியும் வற்புறுத்தி சந்நியாச தீட்சை பெற்றார். சந்நியாசம் பெற்ற பிறகு அவருக்கு ‘நாத பிரம்மானந்தா’ எனும் தீக்ஷா நாமம் சூட்டப்பட்டது. அதன் பிறகு தியாகராஜர் அங்கு கூடியிருந்த அடியார்களை நோக்கி, ‘‘நாளை முற்பகல் பதினோரு மணிக்கு என்னை அழைத்துக் கொள்வதாக ராமபிரான் வாக்குறுதி தந்துள்ளான். எனவே இது முதல் இடைவிடாமல் பஜனை நடக்கட்டும்!” என்றார்.
இத்தகவல் ஊரெங்கும் பரவியது. ஏராளமான மக்கள் மறுநாள் காலையில் அங்கே கூடி விட்டார்கள். அப்போது தியாகராஜரின் அருகில் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர், தில்லை ஸ்தானம் ராம ஐயங்கார், அய்யா பாகவதர், வாலாஜாபேட்டை கிருஷ்ண சுவாமி பாகவதர், காஞ்சி வெங்கடாத்ரி சுவாமி, தாலுகா தாசில்தார் சியாமராவ் எனப் பலரும் கூடியிருந்தார்கள்.
சித்தி அடைந்த அந்த நாளன்று காலையில், பரமாத்முடு – என்ற ஒரு கீர்த்தனையும் பரிதாபமு – எனும் ஒரு கீர்த்தனையும் இயற்றிப் பாடினார் தியாகராஜர்.குறிப்பிட்ட நேரம் நெருங்கியது. தியாகராஜர் யோக சமாதியில் அமர்ந்திருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் தியாகராஜரின் தலையில் இருந்து ஓர் அமானுஷ்யமான ஓசை – சப்தம் எழுவதை அங்கே சபையில் இருந்தவர்கள் கேட்டார்கள்.
மறு வினாடியில்… ஓர் ஒளிப் பிழம்பு தியாகராஜரின் தலை உச்சியிலிருந்து, பளிச்சிட்டு மெதுவாக மேல் எழும்பி வானத்தில் வடக்கு நோக்கிச் செல்வதைக் கண்டார்கள்.அதன்பிறகு, தியாகராஜரின் திருமேனியைப் பூரண மரியாதைகளுடன் மங்கள வாத்தியங்கள் முழங்கக் காவேரி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று, அவரது குரு சொண்டி வெங்கட ரமணய்யாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்தார் கள்; அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தில் ஒரு பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.
அந்த இடத்தில் இன்றும் அந்த நன்னாளன்று, ஏராளமான சங்கீத வித்வான்கள் கூடித் தியாகராஜரின் கீர்த்தனைகளை மெய்யுருகிப் பாட, அடியார்கள் ஏராளமானோர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்தப் பாடல்களை, கீர்த்தனைகளைக் கேட்டு தியாகராஜரை மனமார வேண்டி அங்கிருந்து செல்வதை, இன்றும் காணலாம்.கர்நாடக சங்கீத உலகில் மும்மூர்த்திகளில் முதல்வரான தியாகராஜ சுவாமிகள் வரலாற்றில் இருந்து நாம் பார்த்தது சிலவே!
பி.என். பரசுராமன்
