×

மழையருள் பொழிவாள் மாரியம்மன்

நன்றி குங்குமம் தோழி

இயற்கையையே இறைவனாகக் கருதி வழிபடும் முறைதான் மனித குலத் தோற்றத்தின் போது இருந்திருக்கிறது என்றே சொல்லலாம். அதனால்தான் வெயில், மழை, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐம்பூதங்களையும் இறைத்தன்மைகளாக வணங்கி வந்திருக்கிறோம். இந்த ஐந்தும் எப்படி உருவாயின என்பதைவிட யாரால் உருவாயின என்ற வியப்புதான் இறையருளைப் போற்ற வைத்திருக்கிறது. காரணம் கண்டுபிடிக்க முடிந்ததை விஞ்ஞானம் என்றால், முடியாததை உணர்வது மெய்ஞ்ஞானம் என்றுதான் சொல்ல வேண்டும். அதேசமயம், கண்டுபிடிக்க முடியாத ஏமாற்றத்தால், எதிர்மறை கருத்து கொள்வது அஞ்ஞானம்!

இயற்கையின் ஐம்பூதங்களில் மக்கள் வளம் செழிக்க உதவுவது மழை. தன் பொழிவினால் எல்லா வகையிலும் நன்மைகளை அருளும் இந்த மழையை அம்மனாக உருவகித்து வழிபட்ட, வழிபட்டுவரும் தொன்மையான வழக்கம் தமிழகத்தில் உண்டு. தமிழகம் என்றில்லாமல் பொதுவாக தென்னிந்தியாவில் இந்த வழிபாடு மிகவும் வேரூன்றி இருக்கிறது. மாரி என்றாலே மழை, குளிர்ச்சி மற்றும் மரம் என்றெல்லாம் இயற்கையை ஒட்டிய அம்சங்கள் இணைந்து கொள்ளும்.

இதனால் விவசாயம் செழிப்பதும் அதனால் உலகோர் அனைவருமே நன்மையடைவதும் மாரி(மழை)யம்மனின் அருள். சிலசமயம் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக மழை பொய்த்துவிடவும் கூடும். ஆனால், அந்த சமயத்தில் மாரியம்மனை உளமாற வழிபட, அதனால் இயற்கை-இறை அதிசயமாக மழை பொழிந்து மக்களைக் காத்தும் வருகிறது.

மழை வேண்டி யாகங்களும், வேள்விகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்த ஆன்மிக நடவடிக்கைகளின் அடிப்படை தேவை – நம்பிக்கை, உள்ளார்ந்த பக்தி. வேள்விக்கூடத்தில் குழுமியிருப்போர் அனைவர் மனங்களும் ஒன்றுபட்டு, ஒருசேர வேண்டிக்கொள்ள, அந்த மனவலிமை, கரு மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வாறே பராசக்தியின் அருளால் பொழியவும் செய்தது.

அந்த நம்பிக்கையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு கதை சொல்லப்படுகிறது: மழை வேண்டி நடத்தப்பட்ட யாகத்திற்கு வேத விற்பன்னர்கள் பலரும், பக்தர்கள் நூற்றுக்கணக்கிலும் குழுமியிருந்தார்கள். சம்பிரதாயமான செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு சிறுவன் அங்கே வந்தான். அவன் கையில் விரித்துப் பிடிக்கப்பட்ட ஒரு குடை! அனைவரும் அவனை விசித்திரமாகப் பார்க்க, அவனோ, ‘யாக முடிவில் மழை வரும்தானே? அப்போது நான் நனையாமல் இருக்க வேண்டுமே, அதற்காகத்தான் இந்தக் குடை’ என்று சொல்லி யாகத்தில் ஈடுபட்டவர்களின் நம்பிக்கையை மேலும் தூண்டிவிட்டு, அதை உறுதியும் படுத்தினான் சிறுவன்!

தம் மூதுரையில் பத்தாவது பாடலாக, ‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்று மழைச் சிறப்பை, நற்பண்பு உடையோருடன் ஒப்பிட்டுப் பாடினார் ஔவை பிராட்டியார். நல்ல உள்ளம், தியாக எண்ணம், அறம் வளர்க்கும் பண்பு மற்றும் சமுதாய அக்கறை படைத்தவர் ஒருவர் இருந்தால் கூடப் போதும் அவர் வாழும் பகுதியில் மழை பொய்க்காது அதாவது, மாரியம்மனின் அருள் குறையாது என்பது இப்பாடலின் விளக்கம்.

இறைவனின் கருணையை நாம் ஐம்பூதங்களால் தான் அறிய முடிகிறது, உணர முடிகிறது, துய்க்க முடிகிறது. அதனால்தான் மழை என்ற மாரி, அம்மனாகப் போற்றப்படுகிறது.
அதேசமயம், கோபம் கொண்டு தீய சக்திகளை நெருப்பாகத் தீய்த்து அழிப்பவள் மாரியம்மன். தன் பக்தர்களை ஆக்கிரமிக்கும் தீய சக்திகள் மட்டுமல்ல; பக்தர்களின் மனசில் குடிகொள்ளும் தீய குணங்களையும் அழிக்கும் பெருங்கருணை அவள். இந்த அன்னையைக் காவல் தெய்வமாகவே அந்நாட்களில் போற்றி வணங்கி வந்திருக்கிறோம். முக்கியமாக கிராம எல்லை தெய்வமாக விளங்கி (எல்லையம்மன்) அந்த கிராமத்தையே காத்து நலம் பாலித்திருக்கிறாள் மாரியம்மன். அதனால்தான் ஊரார் இந்த அம்பிகைக்கு பொங்கலிடும் நேர்த்திக் கடன் செலுத்த அன்று முதல் இன்றுவரை தவறுவதே இல்லை.

பாசமிகு அன்னையாக, மக்களின் உடல் நலனைப் பெரிதும் பாதுகாக்கிறாள் மாரியம்மன். தான் மழையாகப் பொழிய இயற்கை முறைப்படி வாய்ப்பில்லாத காலத்தில் வெயிலினால் உண்டாகும் மக்களின் உடல்நலக் கோளாறுகளை, அந்த காலத்திலும் சரி செய்து நலம் அருள்கிறாள் மாரியம்மன். அன்னைக்கு உரியதாகவும், கிருமி நாசினியாகவும், சூட்டைத் தணிக்கும் நலம் தருவதாகவும் உள்ள வேப்பிலை மற்றும் மஞ்சளைப் பயன்படுத்தி, கோடைகால நோய்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறோம்; வேனல் கட்டி, அம்மை போன்ற உஷ்ணம் சார்ந்த சரும உபாதைகள் தாக்கினாலும், அவற்றிலிருந்து விடுபடுகிறோம்.

புராண ரீதியாக பார்வதி/துர்க்கை என்ற சக்தி வடிவமாகப் போற்றப்படுகிறாள், மாரியம்மன். கிருஷ்ணாவதாரத்தில் தோன்றிய மாயாதேவியே இந்த மாரியம்மன் என்றும் கொண்டாடுவது வழக்கம். தன் சகோதரி தேவகிக்கும், அவள் கணவர் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்று நம்பிய கம்சன், அடுத்தடுத்து அவர்களுடைய ஏழு குழந்தைகளையும் கொல்கிறான். எட்டாவதாகத் தோன்றியவன் கிருஷ்ணன்.

ஆனால், இவனாலேயே கம்சன் வதம் செய்யப்பட வேண்டும் என்ற விதி இருந்ததால், அவ்வாறு பிறந்த கிருஷ்ணனுக்கு பதிலாக, கோகுலத்தில் நந்தகோபர்-யசோதை தம்பதிக்குப் பிறந்த மாயாதேவியை இடமாற்றம் செய்தார் வசுதேவர். எட்டாவது பெண் குழந்தை என்று நம்பி அதை வதைக்க வந்த கம்சன், தன் கரங்களில் சிக்காமல் அந்தக் குழந்தை வானோக்கி எழுந்ததைக் கண்டு திகைத்தான். வில்-அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியவளாகக் காட்சியளித்தாள் அந்தக் குழந்தை.

அதோடு, ‘உன்னைக் கொல்லப் போகிறவன், இப்போது கோகுலத்தில் வளர்கிறான்’ என்ற எச்சரிக்கையையும் விடுத்து மாயமாக மறைந்து போனாள். இந்த தேவியே, மகா மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள்.தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மாரியம்மன் கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பக்தர்கள் தீச்சட்டி தூக்குவது, தீ மிதிப்பது, அலகு குத்திக் கொண்டு நடைப் பயணம் மேற்கொள்வது என்றெல்லாம் தங்களை வருத்திக் கொண்டு மாரியம்மனுக்கு நேர்த்திக் கடனையும், நன்றியையும் செலுத்துகிறார்கள். அந்தக் கோயில்களில் பிரதானமாக திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மனைக் குறிப்பிடலாம்.

இந்தக் கோயிலில் உள்ள மூலவர் திருமேனி மூலிகைகளால் ஆனது. பாருங்கள், இங்கேயும் இயற்கைதான் இறையாக, அர்ச்சாவதாரமாக, நின்று கொண்டிருக்கிறது! மூலிகைச் சிற்பம் என்பதால்
அபிஷேகம் செய்யப்படுவதில்லை; மாறாக உற்சவருக்கு எல்லாவகை அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன. இந்த உற்சவர் திருமேனி, விஜயநகர நாயக்க மன்னர்களால் வழிபடப்பட்ட தொன்மை நலம் வாய்ந்தது. மதுரை – தஞ்சாவூர் பகுதிகளில் ஆட்சி புரிந்த காலத்தில், தனக்கு ஏதேனும் நலிவு ஏற்பட்டால், மாரியம்மனை வழிபட்டால் தம் துன்பம் தொலையும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார் மன்னர்.

அதனால் இந்த உற்சவர் சிலையை ஒரு பல்லக்கில் வைத்து அழைத்துவரச் செய்தார். சமயபுரம் பகுதிக்கு வந்தபோது, சிவிகை தூக்கிகள் அதனை கீழே இறக்கி வைத்துவிட்டு உணவு உட்கொள்ளச் சென்றார்கள். திரும்பி வந்து, தூக்க முற்பட, பல்லக்கு கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. அங்கேயே பூமியில் நிலைகொண்டு விட்டது. இதை அறிந்த விஜயரங்க சொக்கநாதர் என்ற நாயக்க மன்னன் அந்தப் பகுதியிலேயே அம்மனுக்குக் கோயில் நிர்மாணித்து வழிபட ஆரம்பித்தான் என்று ஒரு தகவல் உண்டு.

கோயிலில் கல்வெட்டு எதுவும் காணப்படாததால், கோயில் உருவான சரித்திரத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால், கோயிலின் கொடிக்கம்பத்துக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் சில தூண்கள் மண்டபத்துக்கு மட்டுமல்லாமல், கோயில் வரலாறுக்கும் ஆதாரமாக நிற்கின்றன. ஆமாம், தூண்களின் கீழ்ப் பகுதிகளில் நாயக்க மன்னர்கள், சிற்ப உருவங்களாகக் காட்சியளிக்கிறார்கள். இந்த அடிப்படையில் இக்கோயில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஊகிக்க முடிகிறது.

‘ஓம் அம்மையே போற்றி, ஓம் அம்பிகையே போற்றி’ என்று ஆரம்பித்து ‘ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி, ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி’ என்று நிறைவுறுகிறது இந்தத் தலத்து மாரியம்மனுக்கான அஷ்டோத்திரம். இதில் ‘தத்துவ நாயகியே,’ ‘தர்ம தேவதையே’ என்று துதிக்கும் சொற்றொடர்களிலிருந்து, மாரியம்மன் உலக தர்மத்தைக் காப்பவள் என்பது உறுதியாகிறது.
புராதன கோயில் இருக்குமிடங்களிலெல்லாம் நீர்த்தேக்கம் இருக்கும் என்ற சமுதாயப் பொதுநல உண்மைக்கு ஆதாரமாக சமயபுரம் மாரியம்மன் கோயில், பெருவள வாய்க்காலின் வடபுறம் அமைந்துள்ளது. கரிகால் பெருவளத்தான் என்ற மன்னனால் உருவாக்கப்பட்ட நீரோடை இது.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமைச் செயலகம் இக்கோயில் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏனென்றால் இக்கோயிலில் திருவிழா ஆரம்பித்த பிறகுதான் பிற மாரியம்மன் கோயில்களிலும் விழா தொடங்குவதை, சம்பிரதாயமாக மேற்கொள்வதாகச் சொல்கிறார்கள். பொதுவாக பக்தர்கள் நேர்த்திக் கடன் நோற்று அம்மனை வழிபடுவதுதான் வழக்கம். ஆனால், இந்தக் கோயிலில், தன் பக்தர்கள் நலனுக்காக அம்மனே ‘பச்சைப்பட்டினி விரதம்’ மேற்கொள்கிறாள்!

அதாவது, நாள் முழுவதும் திரவ ஆகாரம் தவிர வேறு நிவேதனம் எதையும் அம்மன் ஏற்பதில்லை. ஆமாம், இளநீர், மோர், பானகம் மற்றும் துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு ஆகியவைதான் நிவேதனமாகப் படைக்கப்படுகின்றன. அதுவும் ஒருநாளைக்கு மாலை வேளையில் மட்டும்தான்! மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக் கிழமை முதல், பங்குனி மாதக் கடைசி ஞாயிறுவரையிலான 27 நீண்ட நாட்களுக்கு இந்த பட்டினி விரதம்!

இப்படி உலக நலனுக்காக அம்மா விரதம் இருக்கும்போது, பக்தர்கள் மட்டும் புசிப்பார்களா என்ன? அவர்களும் ஆயிரக்கணக்கில் அதேபோன்ற ஆகாரத்தை ஏற்று பரிபூரண பக்தியுடன் விரதம் கடைபிடிக்கிறார்கள். மாங்கல்ய பலம், பிள்ளைப் பேறு, பொதுவான உடல் நலம் என்று வரமருளும் சமயபுரத்தாளின் கோயில் கதவுகள் பக்தர்களுக்காக எப்போதும் திறந்தே காணப்படுகின்றன. ஆமாம், காலை 5.30 முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கிறது. பக்தர்கள் தம் வசதிக்கேற்ப அன்னையை ஒருநாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தரிசித்து நல்வாழ்க்கை அமையப்பெறலாம்.

தொகுப்பு: ப்ரபுசங்கர்

Tags : Mariamman ,Kumkum ,
× RELATED திணித்தல் – இறைநீதி அல்ல