புது டெல்லி: அரிய வகை நோயால் உயிருக்கு போராடும் ஆப்கானிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷபூர் சத்ரானுக்கு (Shapoor Zadran) டெல்லியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஷபூர் சத்ரான்.
ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைடோசிஸ் (Hemophagocytic Lymphohistiocytosis) (HLH) உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ-வில்(ICU) அனுமதிப்பட்டுள்ளார். தற்போது அவர் இந்த நோயின் நான்காம் நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரஷித் கான் பிசிசிஐ (BCCI) செயலாளர் ஜெய் ஷா (Jay Shah) மற்றும் தனது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திடம் பேசி ஷபூருக்கான விசா மற்றும் மருத்துவ வசதிகளை விரைவுபடுத்தினார்.
2015ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு (UK) எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் முதல் வரலாற்று வெற்றியை பதிவு செய்தபோது முக்கிய பங்கு வகித்தவர் ஷபூர் சத்ரான். மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்காக 44 ஒருநாள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடி 80-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை இவர் வீழ்த்தி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் முகமாக இருந்த ஷபூர் சத்ரான் விரைவில் குணமடைய பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
