*நண்பர்கள் 5 பேர் கைது
திருமலை : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாய் கிரண், சாய் குமார் மற்றும் ஜெயஸ்வந்த் ஆகியோர் கடந்த 14ம் தேதி ஒரு ஓட்டலில் தங்கினர். மதியம் சுமார் 1 மணியளவில், லட்சுமி சஞ்சனா, புச்சா சாய் கிரண், புடிரெட்லா மணி, ஏ.சாந்தி குமாரி(28) ஆகியோர் ஓட்டலுக்கு வந்து அறை எண் 118ல் தங்கி அனைவரும் அங்கு ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
மது விருந்து நடந்து கொண்டிருந்தபோது, சாந்திகுமாரி, லட்சுமி சஞ்சனாவிடம் சாய் கிரணுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகப் கூறி வருவது குறித்து கேள்வி எழுப்பினார்.
லட்சுமி சஞ்சனா அதை மறுத்தபோது, அவர்களுக்குள் சண்டை மூண்டது. அப்போது சாய் கிரண், லட்சுமி சஞ்சனா மற்றும் ஜெயஸ்வந்த் ஆகியோர் சாந்திகுமாரியை கண்மூடித்தனமாக தாக்கியதோடு மற்றவர்கள் அவரைத் திட்டினர்.
சாய் குமாரும் , பி.மணியும் ஓட்டலை விட்டு சென்றனர். மற்றவர்கள் ஓட்டலின் அறை எண் 119க்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து, சாய் கிரண் தண்ணீர் எடுக்க வெளியே சென்று, 118ம் எண் அறையில் இருந்த சாந்திகுமாரியிடம் சென்றார்.
தனது நண்பர்களின் தாக்குதலால் மனமுடைந்த சாந்திகுமாரி கதவை உள்ளிருந்து பூட்டிக்கொண்டிருந்துள்ளார். கதவை தட்டியும் திறக்காததால், அனைவரையும் அழைத்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சாந்திகுமாரியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் சாந்திகுமாரியை நண்பர்கள் நடத்திய உடல் ரீதியான தாக்குதல், திட்டியது மற்றும் அவமானப்படுத்துதல் ஆகியவை தற்கொலைக்கு முதன்மை தூண்டுதலாக இருந்ததாக முடிவு செய்தனர்.
தற்கொலைக்குத் தூண்டியதற்காக புச்சா சாய் கிரண்(24), ராம்பா லட்சுமி(20), கோபசனா வெங்கட சாய் ஜெயஸ்வந்த்(23), வாசுபள்ளி சாய் குமார்(24) மற்றும் நரவா சாய் குமார்(25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
