காங்கயம்,ஏப்.20: தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (28). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் கரூர் நோக்கி வந்தார். காங்கயம்-கரூர் சாலையில் வீரணம்பாளையத்துக்கு வந்தபோது அங்குள்ள பெட்ரோல் பங்கில் வீரமணி லாரியை நிறுத்தினார். பின்னர் சாப்பிடுவதற்காக சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவையில் இருந்து கரூர் நோக்கி சென்ற வாடகை கார் வீரமணி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வீரமணி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் வீரமணியை மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர் பரிசோதித்து வீரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த ஹரீஷ்குமார் (27) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
