×

மக்கள் உற்சாக வரவேற்பு சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ: 3 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

 

சென்னை: சென்னையில் 3 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்துவருகிறார்.

நேற்று காலை சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின், மாலையில் ஓசூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் சென்னை திரும்பிய அவர் நேராக எல்டாம்ஸ் சாலை முதல் தியாகராய நகர் வரை வாகனத்தில் இருந்து ரோடு ஷோ மற்றும் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரித்த முதல்வருக்கு, பொதுமக்கள் பூ போட்டு, பரிசு அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலில் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் த.வேலுவை ஆதரித்தும், அதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு எழிலனை ஆதரித்தும், இறுதியாக தியாகராய நகர் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்தும் முதல்வர் பிரசாரம் மேற்கொண்டார்.

மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் த.வேலுவை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஓசூரில் கூட்டம் முடித்து வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது ஒன்று தெரிந்து கொண்டேன்.

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 2.0 திமுக ஆட்சிக்கு ஆதரவு அளித்து மாபெரும் வெற்றிக்கு மக்கள் ஓகே சொல்லிவிட்டார்கள். மயிலாப்பூர் தொகுதியில் வேலு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து எப்படி எல்லாம் பணியாற்றினார் என்பது உங்களுக்கு தெரியும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக்கூடிய சேவகனாக, ஒரு தொண்டனாக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பணியாற்றியதை நீங்கள் மட்டும் இல்லை, முதல்வராக இருந்து நானும் பாராட்டியிருக்கிறேன், வியந்திருக்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறார். அதனால்தான் மீண்டும் அவரைத் தேர்ந்தெடுத்து மீண்டும் இந்தத் தொகுதியில் நிறுத்தியிருக்கிறேன். என் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு எழிலனை ஆதரித்து முதல்வர் பேசியதாவது: நம்ம ஆயிரம் விளக்கு, இது என்னுடைய தொகுதி. என்னைப் பல முறை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இந்த தொகுதியில் எழிலன் போட்டியிடுகிறார். . நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது டாக்டர் தாமஸ் சாலை எப்படி இருந்தது என எனக்குத் தெரியும்.

மழை வந்தாலும் தண்ணீர் எப்படி நிற்கும் எனத் தெரியும். தீ என்றாலும் இந்தச் சாலைதான் அதிகம் பாதிக்கும். தற்போது எந்தப் பாதிப்பும் இல்லை. அதற்குக் காரணம் நம்ம ஆட்சி, நம்முடைய எம்எல்ஏ, காரணம். உங்களுடைய முதலமைச்சர், நானும் ஒரு காரணம். அதிமுக காலத்தில் வெள்ளம் வந்தால் என்னென்ன ஆளானீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

ஆனால் தற்போது மழை வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. தண்ணீர் எங்கும் தேங்குவதில்லை. சென்னை மாவட்டம் என்னுடையது. என்னை வளர்த்த மாவட்டம், என்னை அழகு பார்த்த மாவட்டம். எனவே இந்த மாவட்டத்திற்கு தேடி வந்திருக்கிறேன். எழிலன் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வந்தால் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தோம், அது வழங்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதிகரிக்கப்படும். மேலும் ஆட்சிக்கு வந்ததும் ரூ.8000 இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். அதனை எடுத்துக்கொண்டு பிடித்த பொருளை பிடித்த நிறுவனத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

கணவர் கிட்டக் கேட்கக் கூடாது, அவர்கள் குழப்புவார்கள். நீங்கள் விரும்பி வாங்க வேண்டும். ஏதாவது கணவர் டாபுள் பண்ணினால் என்னிடம் சொல்லுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன். அதனால் பொருட்களை நீங்கள் வாங்கிக்கலாம். எழிலனுக்கு வாக்கு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசினார்.

பின்னர் தியாகராய நகர் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகனை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: சென்ற இடம் எல்லாம் உதயசூரியனுக்கு தான் வாக்கு அளிப்பேன் என ஒரு உறுதி மொழி கொடுத்தார்கள். மீண்டும் நீங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறீர்கள், மீண்டும் 2.0 திமுக ஆட்சிதான் வரப் போகிறது என்று எல்லாம் உறுதி கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

திமுக ஆட்சி வர வேண்டும், நான் முதல்வராக வர வேண்டும், 200 பேர் சட்டமன்றத்திற்குப் போகணும் மட்டுமல்ல, இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல். நேற்று பாதி டெல்லியை க்ளோஸ் பண்ணிட்டோம். ஒரு மசோதாவை அவசர அவசரமாகத் திருட்டுத்தனமாகத் தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் கொண்டு வந்தார்கள்.

கூட்டணியுடன் சேர்த்து அவர்கள் தான் பெரும்பான்மை. மசோதா கொண்டு வந்து விவாதம் நடைபெற்ற பிறகு வாக்கு எண்ணிக்கை போது பாஜ ஆதரவாக இருந்த கட்சி கூட அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்கு அளித்து தோற்கடித்த வரலாறு இப்போதுதான் முதல் முறையாக நடைபெற்றிருக்கிறது. இனிமேல் பாஜவை பொறுத்தவரையிலும் அவர்களுக்கு தோல்விதான்.

40 எம்பிக்கள் அங்கு இருந்ததால்தான் அங்கு அழுத்தம் கொடுத்து மற்ற கட்சிகளுடன் சேர்த்து மற்ற மாநில எம்பிக்களுடன் பேசி அவர்களைத் தோற்கடித்தோம். அதேபோல சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேல் எதிர்பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உங்களை எல்லாம் பார்த்த பிறகு 234 வந்தாலும் ஆச்சரியம் இல்லை. இந்த அளவு வந்தால்தான் நம்மைக் கண்டு பயப்படுவார்கள். இல்லை என்றால் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிவிடுவார்கள். பாஜ ஆட்சி எதையும் செய்யத் தயாராக இருக்கிறது.

தியாகராய நகர் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், அன்பழகன் மகன். அவர் கழகத்திற்காக பல்வேறு பணிகள் தியாகம் செய்துள்ளார். முக்கியமாக கொரோனா நேரத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவரை காப்பாற்ற முடியாமல் நம்மை விட்டுப் பிரிந்தார். அது சாதாரண தியாகம் இல்லை. அவர் செய்த தியாகத்திற்கு அவர் பெயரில் பாலம் அமைக்கப்பட்டது.

அவர் இல்லை என்றால் இந்தப் பாலம் அவர் பெயரைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே அவருடைய பையன் ராஜா அன்பழகனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். மறக்காமல் உதயசூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,DMK ,Tamil Nadu… ,
× RELATED விருதுநகர் பட்டாசு ஆலையில் மீண்டும் விபத்து: 8 பேர் காயம்