×

தமிழ்நாட்டில் இன்று 3 தொகுதிகளில் ராகுல் பிரசாரம்

சென்னை: திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாட்டில் இன்று 3 தொகுதிகளில் ராகுல்காந்தி சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார். அதை தொடர்ந்து, 20ம் தேதி மீண்டும் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய வர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். இன்று முற்பகல் 11.10 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி செல்கிறார். 11.45 மணிக்கு பொன்னேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.

பின்னர் சோளிங்கரில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். பிற்பகல் 1.15 மணிக்கு சோளிங்கர் பிரசார கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி, அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்புகிறார். இதனையடுத்து சென்னையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ராகுல்காந்தி திருச்சி செல்கிறார். மாலை 3.45 மணிக்கு திருச்சி சென்றடையும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறையூர் செல்கிறார்.

துறையூரில் மாலை 4.05 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக திருச்சிக்கு திரும்புகிறார். பின்னர் மாலை 5.40 மணிக்கு தமிழக பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருச்சியில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார். வரும் 20ம் தேதி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதிகள் என தென்மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏப்ரல் 19ம்தேதி (நாளை) திருநெல்வேலி, கன்னியாகுமரியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.  20ம்தேதி ஓசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி பிரசாரம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே முதல்வரின் பிரசார பயணத் திட்டம் போடப்பட்டுள்ளது. பயணத்திட்டத்தை மாற்றினால் 30 தொகுதிகளில் முதல்வரின் பிரசாரம் பாதிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஒருவேளை 20ம் தேதி சென்னை எழும்பூரில் முதல்வருடன், ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Rahul Gandhi ,Tamil Nadu ,Chennai ,DMK ,Congress ,
× RELATED வேட்புமனுவில் சொத்து விவரங்களை...