×

காற்றழுத்த தாழ்வுப்பாதை நீடிப்பு தமிழகத்தில் சில இடங்களில் மழை: வெப்பமும் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்துள்ள நிலையில், 3 மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து, படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. பிற தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை நிலவியது. அதன் காரணமாக ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

மேலும், வேலூர், திருச்சி, கோவை, தர்மபுரி, மதுரை மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் நிலவியது. வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் மன்னார் வளைகுடா வரை உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலை கொண்டுள்ளது.

இதையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை நேற்று பெய்தது. இதேநிலை 23ம் தேதி வரையில் நீடிக்கும். இன்றும், நாளையும் உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு.

எனினும் படிப்படியாக வெப்பநிலை உயரும். இயல்பு நிலையை விட 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதன் காரணமாக சில இடங்களில் அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சென்னையில் இயல்புநிலையை ஒட்டியே வெயில் நிலவும். சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED வேட்புமனுவில் சொத்து விவரங்களை...