×

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை ஒன்றிய பாஜ அரசு மொத்தமாக திரும்ப பெற வேண்டும்: எதிர்ப்பை மீறி நிறைவேற்றினால் விளைவுகளை தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பாஜ அரசு மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்ப்பை மீறி நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளை தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.

நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால், சொல் ஒன்று செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது என திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.

இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது. அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளை தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நேரு இந்தியை திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார்.

ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், வாஜ்பாயும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு. தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union BJP government ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED வேட்புமனுவில் சொத்து விவரங்களை...