அரசியல் வரைபடத்தை மாற்ற பாஜ முயற்சிக்கிறது: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு வழங்கும் செயல்முறை, அரசியல் வரைபடத்தை மாற்றும் ஒரு முயற்சி என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். பெண்கள் இட ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 3 மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் செயல்முறை, உண்மையில் இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் ஒரு முயற்சியாகும். குறிப்பாக அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் மேற்கு வங்க மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பெண் வாக்காளர்கள் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்புள்ள நிலையில், பிரதமர் மோடி தான் பெண்களுக்கு ஆதரவானவர் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

இது மகளிர் மசோதா அல்ல. இதற்கும் பெண்கள் அதிகாரமளித்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் அனைவரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இப்போது நடப்பது இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றும் ஒரு முயற்சி. விளிம்புநிலை குழுக்களுடன், குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் அதிகாரத்தைப் பகிர்வதற்கு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

உயர் வகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்களின் வாக்கு வங்கி, இந்திய அரசியல் வரைபடத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதால், தங்கள் பலம் குறைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். அரசு செய்வது தேச விரோதச் செயலுக்குச் சற்றும் குறைவானதல்ல. தெற்கு, வடகிழக்கு மற்றும் சிறிய மாநிலங்களிடம் அரசாங்கம், ‘நாங்கள் ஆட்சியில் நீடிக்க வேண்டுமானால், உங்கள் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கப் போகிறோம் என்று சொல்கிறது. ஆனால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ச்சியாக 4வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்காக வரும் 2029 தேர்தலுக்கு முன்னதாக, தென்னிந்திய மாநிலங்களில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நடவடிக்கை குறைக்கிறது. பாஜ தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பறிக்க முயற்சி செய்கிறது.

மேஜிக் செய்பவர்களை போல ஒன்றின் மீது ஒன்றை மறைத்து வித்தை காட்டுவது போல மசோதா உள்ளது. பணமதிப்பிழப்பு,பாலக்கோட், ஆபரேஷன் சிந்தூர் என பல மாயாஜாலத்தை நிகழ்த்திய வித்தைக்காரர் தற்போது பிடிபட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

* ‘எனக்கும், பிரதமருக்கும் மனைவி பிரச்னை இல்லை’
விவாதத்தின் போது அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலை போல மனைவிக்காக கவிதை எழுதாததால் மனைவியிடம் திட்டு வாங்கியதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நகைச்சுவையாக கூறினார். அதை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, பெண்கள் தேசிய கற்பனையிலும் தேசிய கண்ணோட்டத்திலும் ஒரு உந்து சக்தியாக உள்ளனர்.

நாம் அனைவரும் வாழ்வில், தாய்மார்கள், சகோதரிகள், மனைவி ஆகியோரிடம் இருந்து நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி, கற்றுக்கொண்டிருக்கிறோம். எனக்கும் பிரதமருக்கும் மனைவி பிரச்னை இல்லை. அதனால் எங்களுக்கு அந்த உள்ளீடுகள் கிடைப்பதில்லை என்றார்.

* 20 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை ஐந்தே நிமிடத்தில் சாதித்த பிரியங்கா
ராகுல் காந்தி பேசுகையில் தனது சகோதரி பிரியங்காவை புகழ்ந்து பேசினார்.
நேற்று(நேற்றுமுன்தினம்), எனது சகோதரி பிரியங்கா ஐந்து நிமிடங்களில் ஒரு சாதனையை நிகழ்த்தியதை நான் பார்த்தேன். எனது இருபது வருட அரசியல் வாழ்க்கையில் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. அது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிரிக்க வைத்ததுதான் என்றார்.

Related Stories: