×

2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களை கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் திமுகவே அள்ளும்; ஏஎன்எஸ் கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் அக்னி நியூஸ் சர்வீசஸ் (ஏஎன்எஸ்) நிறுவனம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கருத்து கணிப்புகளை நடத்தியது. தொடர்ந்து கருத்துக்கணிப்பு முடிவுகளை நேற்று வெளியிட்டது. அதில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களைக் கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்னி நியூஸ் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில் கூறியிருப்பதாவது: வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 56 இடங்களை பிடிக்கும். மண்டல வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 36 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி அசுர பலத்துடன் உள்ளது. இங்கு அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மத்திய மண்டலத்தில் 37ல் 35 இடங்களையும், தென் மண்டலத்தில் 58ல் 42 இடங்களையும் திமுக கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை மாநில அளவில் திமுக கூட்டணி 45.4 சதவீத வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக கூட்டணி 35.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தவெக 11.5 சதவீத வாக்குகளைப் பெறும். சீமானின் நாதக ஒட்டுமொத்தமாக 5.6 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான தரவுகளின்படி, சென்னை (16 தொகுதிகள்), திருவள்ளூர் (10), திருச்சி (9), தஞ்சாவூர் (8), மற்றும் காஞ்சிபுரம் (4) போன்ற மாவட்டங்களில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் வென்று முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தும் என தெரிகிறது.

அதேபோல் நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருவாரூர், ராமநாதபுரம், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் திமுக கூட்டணி 100% இடங்களைக் கைப்பற்றும் என ஆய்வு கூறுகிறது. அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகள், நீலகிரி 3 தொகுதிகள், தஞ்சாவூரில் 8 தொகுதிகள், ராமநாதபுரம் 4 தொகுதிகள், அரியலூர் 2 தொகுதிகள் என மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

Tags : DMK ,2026 assembly elections ,Chennai ,Tiruvallur ,Kanchipuram ,ANS ,Tamil Nadu ,assembly ,Agni News Services ,2026 assembly elections… ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக...