துவரங்குறிச்சி, ஏப்.16: துவரங்குறிச்சி அருகே தோட்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 140 வைக்கோல் கட்டுகள் தீ பற்றி எரிந்தது சேதமடைந்தன. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே பிடாரப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ்(40). இவர் தனது கால்நடைகளுக்கு தேவையான சுமார் 140 வைக்கோல் கட்டுகளை வாங்கி அவரது தோட்டத்தில் அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் வைக்கோல் போர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அருகில் இருந்தவர்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலை அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலை அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கலைத்தும் தீயை கட்டுப்படுத்த போராடினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
