தரங்கம்பாடி,ஏப்.16: தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடை காலம் துவங்கியதால் விசை படகுகளும், பைபர் படகுகளும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கபட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. அந்த மீனவ கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தொழிலுக்கு 100க்கும் மேற்பட்ட விசை படகுகளையும், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்து சட்டம் 1983 கீழ் தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு நேற்று முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமுலுக்கு வந்துள்ளது. மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாததால் விசை படகுகளும். பைபர் படகுகளும் தரங்கம்பாடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தபட்டுள்ளன.
