×

நிதிஷ்குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து பீகாரின் புதிய பாஜ முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார்: ஜேடியுவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்கள்

பாட்னா: கடந்த 2025 சட்டப்பேரவை தேர்தலில் ஜேடியு-பாஜ இணைந்த என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், 5 மாதத்தில் நிதிஷ்குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ளார். கடந்த 10ம் தேதி அவர் மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல்வர் பதவியிலிருந்து விலகி, சட்டப்பேரவையை கலைத்தார். இதைத் தொடர்ந்து, பாஜ சட்டப்பேரவை கட்சி தலைவராக முன்னாள் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தலைமையில் புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்பட்டது. இந்நிலையில், பீகாரில் முதல் முறையாக பாஜ தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சி லோக் பவனில் நேற்று நடந்தது. இதில், புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரிக்கு ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சாம்ராட்டுடன், ஜேடியு கட்சியை சேர்ந்த விஜய்குமார் சவுத்ரி, பிஜேந்திர யாதவ் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இவர்கள் இருவரும் நிதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இருவரும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், புதிய அமைச்சரவையில் ஜேடியு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் அளிக்கப்பட்டு விரைவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என கூட்டணிக்கட்சிகள் எதிர்பார்த்துள்ளன. பதவியேற்பு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, சிராக் பஸ்வான், ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2017ல் பாஜவில் இணைந்த சாம்ராட் சவுத்ரி, முந்தைய நிதிஷ் ஆட்சியில் துணை முதல்வராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். 1952ல் முதல் தேர்தலை சந்தித்ததில் இருந்து பீகாரில் பாஜவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்பது இதுவே முதல்முறை. இவர் பீகாரின் 24வது முதல்வராவார்.

பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ‘‘இன்றிலிருந்தே நான் பணியை தொடங்குகிறேன். பிரதமர் மோடியும், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாரும் இணைந்து உருவாக்கிய ஆட்சி முறைதான் பீகாரில் பின்பற்றப்படும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்’’ என்றார். பின்னர் உடனடியாக தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி அதிகாரிகளை சந்தித்து தனது பணியை தொடங்கினார்.

* பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் விடுத்த வாழ்த்து செய்தியில், ‘‘பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவரது ஆற்றல், மக்கள் சேவை மீதான அர்ப்பணிப்பு மற்றும் அடித்தள அளவிலான அனுபவம் ஆகியவை பீகாருக்கு பெரிதும் பயனளிக்கும். அவரது திறமையான தலைமையின் கீழ், மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, பீகார் மாநிலம் அனைத்துத் துறைகளிலும் புதிய வளர்ச்சி சிகரங்களை எட்டும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன்’’ என கூறி உள்ளார்.

Tags : Samrat Chowdhury ,Bihar ,BJP ,Minister ,Nitish Kumar ,JDU ,Patna ,Chief Minister ,JDU-BJP ,2025 assembly elections ,Rajya Sabha ,
× RELATED வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு...