×

தொகுதி மறுவரையறை மூலம் ஓபிசி பிரிவு உரிமைகளை பிரதமர் மோடி திருடுகிறார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: தொகுதி வரையறை மூலம் ஓபிசி பிரிவு உரிமைகளை பிரதமர் மோடி திருடுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி: தற்போது ஒரு மாபெரும் நேர்மையற்ற செயல் அரங்கேற்றப்பட்டு வருகிறது. சாதி கணக்கெடுப்பின் அடிப்படையிலோ அல்லது வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலோ பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான முடிவு எடுக்கப்படுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை.

பிரதமர், உங்களின் (ஓபிசி-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்) உரிமையான பங்களிப்புப் பங்கைப் பறிக்கிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் இல்லாத 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்த அவர் வலியுறுத்துகிறார். ஏனெனில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பங்கைப் பறிக்கும் நோக்கத்தில்தான் அவர் இருக்கிறார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது; நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, உங்களால் ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தரவுகளைப் பயன்படுத்த முடியாது?

சாதி கணக்கெடுப்பு தொடர்பான தரவுகள் வெளிவருவதால் பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜ உறுப்பினர்களும் கலக்கமடைந்துள்ளனர். உங்கள் மக்கள்தொகைக்கு விகிதாசாரமான பங்கை நீங்கள் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை. இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது மட்டுமல்ல, ஒரு தேசவிரோதச் செயலாகும். மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

எனவே அவர்களின் பங்களிப்பைப் பறிக்க மோடி விரும்புகிறார். மோடி விரும்புவது நடந்தால், சிறிய மாநிலங்கள், தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கணிசமாகப் பாதிக்கப்படும், மேலும் அவற்றின் பிரதிநிதித்துவம் குறையும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்கள் தொகை குறித்த தரவுகள் இல்லாத 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட, 2026ல் திட்டமிடப்பட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நீங்கள் (பிரதமர்) இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

நீங்கள் உண்மையிலேயே மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்த விரும்பினால், அதற்கான விதிமுறை ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளது; அதைச் செயல்படுத்துங்கள். நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறிய மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags : PM Modi ,OBCs ,Rahul Gandhi ,New Delhi ,Modi ,Lok Sabha ,Opposition Leader ,
× RELATED வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு...