பாலக்கோடு: நண்பன் இறந்து விட்டதால் வாழ விரும்பவில்லை என உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பட்ரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் காவியா (17), அமானிமல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்த நிலையில், காவியா வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த பாலக்கோடு போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காவியாவின் பள்ளி பாடப்புத்தகத்தில், அவர் உருக்கமாக எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அதில் ‘என்னுடன் படித்த ஹரீஷ் என்ற மாணவன் நண்பனாக இருந்தார். அவர் கடந்த 3ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால், நான் இந்த உலகில் வாழ விரும்பவில்லை. நானும் உன்னை காண உன்னிடத்திற்கு வருகிறேன்’ என எழுதப்பட்டு இருந்தது. நண்பன் இறந்து விட்டதால் வாழ விரும்பவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு, பிளஸ்2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
