- ஜெர்மனி
- எக்குவடோர்
- நியூயார்க்
- இ பிரிவு லீக்
- ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து
- நியூ ஜெர்சி ஸ்டேடியம்
- லெரோய் சென்
நியூயார்க்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஈக்வடாருடன் மோதிய ஜெர்மனி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் 2வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் லெராய் சேன் மின்னல் வேகத்தில் கோல் போட்டு முன்னிலை ஏற்படுத்தினார். எனினும், நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியின் கொண்டாட்டம் வெகு நேரம் நீடிக்கவில்லை. ஈக்வடார் வீரர் நில்சன் அங்குலோ 9வது நிமிடத்தில் பதில் கோல் போட்டு அசத்த 1-1 என சமநிலை ஏற்பட்டது.
மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் தாக்குதலை தீவிரப்படுத்திய ஈக்வடார் அணிக்கு பிளாட்டா கொன்ஸாலோ 77வது நிமிடத்தில் கோல் அடித்து 2-1 என முன்னிலை கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் ஈக்வடார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
இந்த தோல்வி குறித்து ஜெர்மனி கேப்டன் ஜோஷுவா கிம்மிச் கூறுகையில், ‘எதிரணி வீரர்கள் எங்களை விடவும் வெற்றி முனைப்புடன் விளையாடினார்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டதால் சற்று அசட்டையாக இருந்துவிட்டோம்’ என்றார். நட்சத்திர வீரர் டெனிஸ் உண்டவும் இதே கருத்தை வெளிப்படுத்திய நிலையில், பயிற்சியாளர் நகெல்ஸ்மான், ‘இல்லவே இல்லை…
அது போன்ற முட்டாள்தனமான வாதத்தை தயவு செய்து நிறுத்துங்கள். மிகச் சிறப்பாகவே போட்டியை தொடங்கினோம். ஆனால், முதல் கோல் போட்ட பிறகு தற்கொலைக்கு நிகரான வியூக மாற்றமே தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன்’ என்று கேப்டன் கிம்மிச் மற்றும் டெனிஸின் கருத்தை திட்டவட்டமாக ஒதுக்கித் தள்ளினார்.
அதே சமயம் ஈக்வடார் அணி பயிற்சியாளர் செபாஸ்டியன் (41) கொண்டாட்டம் வேற லெவலில் இருந்தது. கொன்ஸாலோ 2வது கோல் போட்டதுமே கேலரிக்குள் ஏறி தாவிக் குதித்த அவர், அங்கு அமர்ந்திருந்த தனது குடும்பத்தினரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
* துருக்கிக்கு ஆறுதல்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த டி பிரிவு லீக் ஆட்டத்தில் துருக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை கடுமையாகப் போராடி வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது. அந்த அணிக்காக அர்டா குலர் (10’), ஆல்பர் யில்மாஸ் (31’), கான் அய்ஹான் (90’+8’) கோல் போட்டனர். அமெரிக்கா சார்பில் ஆஸ்டன் டிரஸ்டி (3வது நிமிடம்), செபாஸ்டியன் பெர்ஹால்டர் (49’) கோல் அடித்தனர்.
கடைசி விநாடியில் கோல் விட்டுக்கொடுத்தது அமெரிக்க வீரர்களையும் அநாட்டு ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டி பிரிவில் அமெரிக்கா (6), ஆஸ்திரேலியா (4) நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்த நிலையில், பராகுவே (4) காத்திருப்பில் உள்ளது. துருக்கி (3) கடைசி இடம் பிடித்தது. சான்பிரான்சிஸ்கோ பே ஏரியா அரங்கில் பராகுவே ஆஸ்திரேலியா மோதிய லீக் ஆட்டம் 0-0 என டிரா ஆனது.

* 5 உலக கோப்பையில் விளையாடிய முதல் ஆசிய வீரர் நகடோமோ
ஜப்பான்-ஸ்வீடன் அணிகளிடையே டாலஸ் அரங்கில் நடந்த எப் பிரிவு லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜப்பான் சார்பில் டெய்ஸப் மேடா 56வது நிமிடத்திலும், ஸ்வீடன் தரப்பில் அந்தோனி எலங்கா 62வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த போட்டியில் ஜப்பான் அணிக்காகக் களமிறங்கிய யுடோ நகடோமோ (39 வயது), 5 உலக கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கால்பந்து வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தும் 10வது வீரர் நகடோமோ. அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவரும் தங்களின் 6வது உலக கோப்பை தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
5 தொடர்களில் விளையாடிய பெருமையை பெற்ற லூகா மோட்ரிச், லூயிஸ் சுவாரெஸ், மேனுவல் நியூயர், லொதார் மத்தாயுஸ், கார்டாடோ, ரபேல் மார்கியூஸ், கர்பஜால் ஆகியோர் வரிசையில் தற்போது நகடோமோ இணைந்துள்ளார். எப் பிரிவில் நெதர்லாந்து (7), ஜப்பான் (5), ஸ்வீடன் (4) அணிகள் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன. கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 1-3 என்ற கோல் கணக்கில் மண்ணைக் கவ்விய துனிசியா (0) ஏமாற்றத்துடன் வெளியேறியது.
* ஐவரி கோஸ்ட் அமர்க்களம்
இ பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கியூரகோவை வீழ்த்தி நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. பிலடெலியாவில் நடந்த அந்த போட்டியில் ஐவரி கோஸ்ட் சார்பில் நிகோலஸ் பெபே 7வது மற்றும் 64வது நிமிடத்தில் அபாரமாக கோல் போட்டு வெற்றிக்கு உதவினார். இ பிரிவில் தலா 2 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்ற ஜெர்மனி, ஐவரி கோஸ்ட் அணிகள் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்த நிலையில், ஈக்வடார் (4) மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்கிறது. ஒரு டிரா, 2 தோல்வி கண்ட கியூரகோ (1) பரிதாபமாக வெளியேறியது.
