×

இந்தியாவுடன் முதல் டி20 அயர்லாந்து அபார வெற்றி

பெல்பாஸ்ட்: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், அயர்லாந்து அணி 34 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஸ்டோர்மாண்ட், சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

டிம் டெக்டர், ராஸ் அடேர் இணைந்து அயர்லாந்து இன்னிங்சை தொடங்கினர். அடேர் 12, டிம் டெக்டர் 17 ரன் எடுத்து ராணா வேகத்தில் வெளியேற, ஹாரி டெக்டர் டக் அவுட்டானார். அவர் அர்ஷ்தீப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சாம்சனிடம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் லோர்கன் டக்கர் 50 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), பென் காலிட்ஸ் 15, கேரத் டெலனி 49 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன் எடுத்தார். மெக்கார்தி 7, ஹம்ப்ரிஸ் 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, அயர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது.

இந்திய பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப், அக்சர் தலா 2, ஷிவம் துபே 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக், சாம்சன் இணைந்து துரத்தலை தொடங்கினர். ஒரு முனையில் அபிஷேக் அதிரடியாக ரன் குவிக்க… சாம்சன் 5, இஷான் 1, கேப்டன் ஷ்ரேயாஸ் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தனர்.

திலக் வர்மா ஓரளவு தாக்குப்பிடிக்க, அபிஷேக் 50 ரன் (20 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி விடை பெற்றார். திலக் வர்மா 19, வாஷிங்டன் 9 ரன்னில் வெளியேற, இந்தியா 12 ஓவரில் 100 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஷிவம் துபே அக்சர் இணைந்து அணியை மீட்கப் போராடினர். துபே 25 ரன் (14 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மூண்ட்ரா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, இந்திய அணியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.

அக்சர் 15, ராணா 8, அர்ஷ்தீப் 2 ரன்னில் அவுட்டாக… இந்தியா 18.5 ஓவரில் 148 ரன் மட்டுமே எடுத்து 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பிரசித் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அயர்லாந்து பந்துவீச்சில் ஹம்ப்ரிஸ், ஹாலர்ட் தலா 3 விக்கெட், மூண்ட்ரா 2, மெக்கார்தி, டெலனி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.  அயர்லாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டி20 நாளை நடக்கிறது.

Tags : Ireland ,India Belfast ,India ,Civil Service Cricket Club ,Stormont, ,Shreyas Iyer ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக...