×

28ம்தேதி வாழ்வா, சாவா போட்டியில் வலிமையான ஆஸி.யை எதிர்கொள்ள தயார்: இந்திய கேப்டன் கவுர் நம்பிக்கை

மான்செஸ்டர்: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இதில் குரூப் 1 பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-வங்கதேசம் மோதின. முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்தியா 16.5ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 34 பந்தில் 53 ரன் அடித்த ஷபாலி வர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியதாவது: இது ஒரு சிறப்பான வெற்றி. ஆட்டத்தை விரைவாக முடிக்க நினைத்தோம். எதிர்பார்த்தபடியே 2-3 ஓவர் முன்னதாகவே முடித்தது மகிழ்ச்சி. ஃபீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை. கடைசி போட்டியில் வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அது எங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையைத் தரும். 50 ஓவர் உலக கோப்பையில் அரையிறுதியில் ஆஸி.க்குஎதிராக நவி மும்பையில் கிடைத்த வெற்றி பெரும் தன்னம்பிக்கையை அளித்ததுடன், பல தடைகளையும் தகர்த்தது, என்றார்.

நேற்றிரவு நடந்த மற்றொரு போட்டியில் இதே பிரிவில் தென்ஆப்ரிக்கா 88 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. குரூப் 1 பிரிவில் ஆஸி. அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்ட நிலையில் இந்தியா, தென்ஆப்ரிக்கா தலா 6 புள்ளிகளுடன் முறையே 2மற்றும் 3வது இடத்தில் உள்ளன. கடைசி போட்டியில் இந்தியா வரும் 28ம் தேதி வாழ்வா-சாவா நிலையில் ஆஸி.யுடன் மோதுகிறது. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெற முடியும்.

Tags : Aussie ,Kaur Hamba ,Manchester ,10th ICC Women's T20 World Cup ,England ,India ,Bangladesh ,
× RELATED சில்லிபாயின்ட்…