லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்தை சேர்ந்த ஆபரேஷன் ஃபோர்டிட்யூட் என்ற தயாரிப்பு நிறுவனம், ‘ஃபோர்டிட்யூட்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ஸ்பை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. டஸ்கோ போபோவ் என்ற உளவாளி வேடத்தில் நிக்கோலஸ் கேஜ் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஓடிடி உரிமை மற்றும் வெளியீட்டு உரிமை குறித்த பேச்சுவார்த்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் நடந்து வந்தது. அதற்காக படத்தின் மாஸ்டர் காப்பி அடங்கிய ஹார்ட்-டிஸ்க்கை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. அந்த ஹார்ட்-டிஸ்க் நெட்பிளிக்ஸ் அலுவலகத்தில் இருந்து காணாமல் போனதாக தயாரிப்பு நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், ‘ஃபோர்டிட்யூட்’ படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பே ஆன்லைனில் வெளியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள் என்றும், படத்துக்கான மொத்த செலவு இதுவரை சுமார் 45 மில்லியன் டாலர்கள் என்றும் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்காக பட தயாரிப்பு நிறுவனத்துக்கு 105 மில்லியன் டாலர் (ரூ.1,000 கோடி) நெட்பிளிக்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் நெட்பிளிக்ஸ் தரப்பில் ‘முறையான பாதுகாப்பு இல்லாமல் கொடுக்கப்பட்ட படம் காணாமல் போனதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது’ என்று கூறி, அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
