சென்னை: ஓ.எம்.ஆர். சாலையில் நாவலூர், தாழம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறியதாக வங்க தேசத்தினர் 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்டோரை தாம்பரம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியான ஓ.எம்.ஆர். சாலையில் நாவலூர், தாழம்பூர், படூர், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், தையூர், கானத்தூர், முட்டுக்காடு பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. மேலும், சிறுசேரி சிப்காட் பூங்காவில் 80க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் விரிவாக்கப் பணிகள், புதிய நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் வேலை செய்வதற்காக மேற்கு வங்கம், அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இருந்து சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 3 லட்சம் பேர் ஓ.எம்.ஆர். சாலையில் ஆங்காங்கே கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் குடிசை போட்டு தங்கி உள்ளனர். இவர்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் போலி ஆதார் அட்டையுடன் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களும் வந்து, தங்கி உள்ளதாகவும், வேலை செய்வதாகவும் ஒன்றிய அரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை கருத்துரு ஒன்றை அனுப்பியது.
மேற்கு வங்க தொழிலாளர்களின் போர்வையில் வங்க தேசத்தினர் யாரேனும் தமிழ்நாட்டில் தங்கி உள்ளனரா என ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு தமிழ்நாடு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி உள்ள தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம், தாழம்பூர், கானத்தூர் ஆகிய காவல் நிலையங்களின் எல்லையில் அடங்கிய பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கேளம்பாக்கம் உதவி ஆணையர் ஜான்விக்டர், கேளம்பாக்கம் ஆய்வாளர் தமிழன்பன் ஆகியோர் தலைமையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்றனர்.
கழிப்பட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து அவர்களின் ஆதார் அட்டைகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இதற்கான ஆதார் சேவை இணைய வசதியை பயன்படுத்தி உண்மையான ஆதார் அட்டையை பயன்படுத்துகிறார்களா, அவர்களின் கைரேகை மற்றும் கருவிழி ஒத்துப் போகிறதா, போலி ஆதார் அட்டையா என கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் இந்த சோதனை நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் இருப்பதால் இப்பணி இன்றும் தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். முதற்கட்டமாக சுமார் 30க்கும் மேற்பட்டோர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எப்படி இந்தியாவிற்குள் வந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
